Published:Updated:

வரலாறு வாழ்த்தும்!

வரலாறு வாழ்த்தும்!
பிரீமியம் ஸ்டோரி
News
வரலாறு வாழ்த்தும்!

வரலாறு வாழ்த்தும்!

னைவருக்கும் பசுமை வணக்கம்!

‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ என்பது இந்த ஆண்டுக்கான உலகச் சுற்றுச்சூழல் நாளின் கருப்பொருள். வழக்கம்போல, கடந்த ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்பட்ட இந்த நாளில், ‘2019-ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் இல்லா தமிழகம்’ என்ற அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருப்பது, திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது பிளாஸ்டிக் மற்றும் அதன் கழிவுகளே! குறிப்பாக, நீர்நிலைகள் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை முழுமையாக ஆக்கிரமித்திருக்கின்றன! பூமிக்குள் வாழும் மண்புழுக்கள் தொடங்கி, காட்டில் வாழும் யானைகள் வரை, இதனால் பாதிக்கப்படும் செய்திகளை, வெறுமனே கடந்து கொண்டிருக்கிறோம். இது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் கொள்ளி என்பதை உணர மறுப்பவர்களாக இருக்கிறோம். இதை நமது வருங்கால சந்ததிகளும் மன்னிக்கமாட்டார்கள்.
 
தற்போது, குறிப்பிட்ட சில பயன்பாட்டுக்கான பிளாஸ்டிக்குக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாழை இலை, மந்தார இலை, பாக்குமட்டை என மட்கும் தன்மைகொண்ட இயற்கை பொருள்கள் பயன்பாடு அதிகரிக்கும் என்பது மகிழ்ச்சியான விஷயம். அதேசமயம்... கிட்டத்தட்ட முழுமையாக பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படாதது... வருந்தத்தக்க விஷயமே!

சரி, ஆரம்பகட்ட முயற்சி என்று இதை வரவேற்போம். காலம் கடந்த நடவடிக்கை என்றாலும், இப்போதாவது விழித்துக்கொண்டோமே என்று பெருமிதப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், 2002-ம் ஆண்டு இதே அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில், இப்படியொரு தடை விதிக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் அது திரும்பப்பெறப்பட்ட காட்சிகள், மறுபடியும் அரங்கேற விடாமல் உறுதியோடு இருக்க வேண்டும்.

இப்போதைய முடிவில் உறுதியாக இருந்தால் வரலாறு வாழ்த்தும்! இல்லையேல், நாளை தூற்றுவதற்குக்கூட யாரும் இருக்கமாட்டோம்-ஜாக்கிரதை!

-ஆசிரியர்