
நீதி தேவதையே, சாட்டையைச் சுழற்று!
அரசாங்கங்கள் செயலற்று நிற்கும்போது... நீதிமன்றங்கள்தாம் மக்களின் இறுதி நம்பிக்கை. ஆனால், அங்கேயும் நீதி தாமதிக்கப்படும்போது, மக்களுக்கு வேறு என்னதான் கதி?
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே தமிழக அரசு செயலற்றுதான் கிடக்கிறது. மக்கள் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு, மக்களின் தேவைகளுக்கு உரிய முக்கியத்துவம் என்பதெல்லாம் தொலைதூரத்தில் பறக்கும் மின்மினிப் பூச்சியாகவே தெரிகின்றது. பெரும்தொழில்களை ஈர்க்கும் முயற்சிகள் என்பது துளிகூட இல்லை. தொழில்துறையே மொத்தமாக சுணங்கிக் கிடக்கிறது. சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது, இதுபற்றி ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்துவிட்டார், தமிழகத் தொழில்துறை அமைச்சர்.

சுமார் 50 லட்சத்துக்கும் மேலான மக்களின் பிரச்னைகள் கவனத்தில் கொள்ளாமல், அவர்களுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல பணிகள் அப்படியே நட்டாற்றில் விடப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் காரணம்... வெற்று அரசியல் நாடகமே.
ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, சசிகலா தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் மோதிக்கொள்ள, நடுவில் புகுந்து நாற்காலியைப் பிடித்த எடப்பாடி பழனிசாமி, தன் பதவியை இறுக்கிப் பிடித்துக்கொண்டுவிட்டார். சசிகலா-தினகரன் தரப்பு 18 எம்.எல்.ஏக்களை வளைத்து ஆட்சிக்கவிழ்ப்புக்கு அச்சாரம் போடப் பார்க்க, 18 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 18 பேரின் தொகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள்தாம் இதனால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். நீதிமன்றப் படியேறிய இந்த விஷயத்தில், தீர்ப்பு காலதாமதம் ஆவதுதான் கவலையைக் கூட்டுகிறது.
ஊழல் வழக்கில் கைது செய்யப்படும் அல்லது தண்டனை பெறும் அரசியல்வாதிகளின் வழக்குகளை, நள்ளிரவில்கூட விசாரித்து உடனடி ஜாமீன் கொடுத்த வரலாறு இங்கே உண்டு. ஆனால், 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கை 9 மாதங்களுக்கும் மேலாக நீட்டிக்க வைத்திருப்பது மேலும் மேலும் மக்களுக்குத் துன்பத்தைத்தான் சேர்க்கும்.
ஜனநாயகத்துக்கு சாவுமணி அடிக்கப்படும்போது, சாட்டை தூக்கவேண்டியவை நீதிமன்றங்களே. மக்கள்தாம் ஜனநாயகத்தின் குரல்வளை. அது நெரிக்கப்படும்போது, ‘உங்களுக்காகத்தான் நாங்கள் இருக்கிறோம்’ என்று நம்பிக்கை தரவேண்டிய நேரமிது என்பதை நீதிதேவதை மறந்துவிடக் கூடாது.