Published:Updated:

கருத்துச் சுதந்திரம் காப்போம்!

கருத்துச் சுதந்திரம் காப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கருத்துச் சுதந்திரம் காப்போம்!

கருத்துச் சுதந்திரம் காப்போம்!

வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை எதிர்த்துக் குரல் எழுப்புகிறவர்கள், அரசின் திட்டங்கள் பற்றி சந்தேகங்களை எழுப்புபவர்கள், மாற்றுக் கருத்துகளை முன்வைப்பவர்கள், பாதிக்கப்படுவோருக்கு ஆதரவாகப் பரிந்துபேசுபவர்கள் எனப் பலரும் வரிசையாகக் கைது செய்யப்படுவது தொடர்கதையாகிக்கொண்டிருக்கிறது!

‘கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில், தாறுமாறாகப் பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று இதற்குக் காரணம் சொல்கிறது அரசுத் தரப்பு. உண்மையில், போராட்டத்தை நோக்கி மக்களை இழுத்துச் செல்வதற்குப் பல சந்தர்ப்பங்களில் முதல்காரணமாக இருப்பதே, அரசாங்கத்தின் பூடகமான நடவடிக்கைகள்தான். ‘அதிகாரம் எங்கள் கைகளில்’ என்ற பயத்தை மக்களின் மனதில் விதைக்கும் வகையில், மக்களுடைய வீடு, நிலம், தோட்டங்களில் படைபரிவாரங்களோடு புகுந்து புறப்படுவதும், எல்லைக் கற்களை நடுவதும்தானே நடக்கின்றன. இவையெல்லாம்தான் மக்களிடம் பலவிதமான அச்சங்களை ஏற்படுத்துகின்றன. இவற்றையொட்டிப் பற்பல வதந்திகள் பரவி, எதிர்ப்பை மேலும் மேலும் பெரிதாக்குகின்றன.

கருத்துச் சுதந்திரம் காப்போம்!இப்போதுகூட, சென்னை-சேலம் எட்டுவழிச்சாலைக்கு ஆங்காங்கே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எந்தவிதமான முன்னறிவிப்பையும் கொடுக்காமல், தமிழக அரசு காட்டும் கெடுபிடிகள் மக்களைப் பரிதவிக்க வைத்துள்ளன. ‘என் நிலம்தான் எனக்கு உயிர்’ என்று கதறும் ஒரு மூதாட்டியை, எட்டுக் காவலர்கள் சேர்ந்து அள்ளிச்செல்லும் காட்சி, காண்போர் அனைவரையுமே கதற வைக்கிறது.

இதுபோன்ற சமயங்களில்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பலரும் களத்தில் இறங்கி நிற்கிறார்கள். இவர்களில் பலரும் சுற்றுச்சூழல் மற்றும் விவசாய ஆர்வம் கொண்டவர்கள். இந்த நாட்டின் வளர்ச்சி மீதும், நாட்டின் எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்டதால்தான், தங்களின் வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு அந்த மக்களோடு கைகோத்துள்ளனர்.

நேற்றைக்கு ஆட்சியில் இருந்தபோது தவறு செய்தவர்களும், இன்றைக்கு ஆட்சியில் இருப்பதால் அதே தவற்றுக்குத் துணைபோகிறவர்களாகவும்தான் இருக்கின்றன பெரும் பெரும் அரசியல்கட்சிகள். தங்களைக் காப்பாற்றுவார்கள் என்று நினைத்து, தாங்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளே இத்தகைய கொடுமைகளுக்குத் துணைபோகும்போது... எதிர்காலத்தை நினைத்துக் கலங்கும் மக்கள், வீதிக்கு வருவதைத் தவிர வேறு வழி இல்லை. அத்தகையோருக்குத் துணையாக நாங்களும் வருகிறோம் என்று நல்ல பல உள்ளங்கள் திரள்வது, தவிர்க்க முடியாததே!

சமூகவிரோத மற்றும் தீவிரவாதச் சக்திகள் ஊடுருவியிருந்தால், அதைக் கண்டறிந்து களையெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையே. அதற்காக, போராடும் எல்லோர் மீதுமே இப்படிப்பட்ட முத்திரையைக் குத்தப் பார்ப்பது... ஜனநாயகத்தையே அழித்துவிடும் என்பதுதான் உண்மை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz