சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இது நமக்கான தேர்வு!

இது நமக்கான தேர்வு!
பிரீமியம் ஸ்டோரி
News
இது நமக்கான தேர்வு!

இது நமக்கான தேர்வு!

ல்விக்கான வாசல்கள் மேலும் மேலும் திறக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் சூழலில், நுழைவுத்தேர்வுகள் என்பவை தவிர்க்க முடியாதவையே! ஆனால், அவற்றுக்கான விதிமுறைகள் தொடங்கி, அவை நடத்தப்படும் விதம் வரை ஏற்படும் குழப்பங்கள், குளறுபடிகள்தான் பெரும்பாலான மாணவர்களையும் பெற்றோர்களையும் அதிக மனச்சோர்வுக்கு உள்ளாக்குகின்றன.

இது நமக்கான தேர்வு!சென்ற ஆண்டு நீட் தேர்வின்போதே, ‘சில மாநிலங்களில் எளிதான கேள்வித்தாள்களும் சில மாநிலங்களில் கடினமான கேள்வித்தாள்களும் வழங்கப்பட்டன’ என்ற விமர்சனம் எழுந்தது. இந்த ஆண்டோ, நீட் தேர்வு மையங்களை ஒதுக்குவதிலேயே சர்ச்சை வெடித்தது. பிறகு, ‘நீட் தேர்வில் வழங்கப்பட்ட வினாக்களில் மொழிபெயர்ப்புப் பிழைகள் உள்ளன’ என்ற புகார்கள் எழுந்தன. அவற்றைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், முடிவுகள் வெளியிடப்பட்டதோடு, முதற்கட்ட கலந்தாய்வும் நடத்தப்பட்டுவிட்டது.

இப்போது, ‘மொழிபெயர்ப்புப் பிழைகள்’ தொடர்பான வழக்கில், ‘தமிழில் தேர்வெழுதிய 24,720 மாணவர்களுக்கும் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்கி, புதிய தரவரிசைப்பட்டியலை வெளியிட வேண்டும்’ என்று தீர்ப்பளித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை.

தரவரிசைப்பட்டியல் மாறினால், ஏற்கெனவே கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும், அது எந்தளவுக்கு அவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் என்கிற கேள்விகள் எழுகின்றன. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தை அணுகி, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை கோரும் முயற்சிகளில் இறங்கியுள்ளது சி.பி.எஸ்.இ. நிறுவனம். இந்தக் குழப்பத்தினால், தமிழக மாணவர்களுக்கான பொறியியல் கல்லூரி கலந்தாய்வும் தள்ளிப்போய்க்கொண்டிருப்பது, நீட் தேர்வில் பங்கேற்காத பிற மாணவர்களையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

நீட் தேர்வில் மட்டுமல்ல, ஐ.ஐ.டி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத்தேர்வு, ஐசிஏஆர் எனப்படும் இந்திய வேளாண்மைத்துறையின் ஆராய்ச்சி கவுன்சிலுக்கான தேர்வு முடிவுகள் ஆகியவற்றிலும் நீதிமன்றத் தலையீடு இருக்கும் அளவுக்குக் குளறுபடிகள். ஓர் எழுத்தரின் தவறு என்பது சிறிய பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். ஆனால் மருத்துவர், ஓட்டுநர், ஆசிரியர் போன்றவர்கள் இழைக்கும் தவறுகளோ பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

உலகத்தரம்வாய்ந்த, பிழையற்ற தேர்வு முறைகளைக் கல்வி நிறுவனங்கள் நடத்துவதை மத்திய- மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல, இன்றைய போட்டிச்சூழலில் நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்வதற்கும், அவற்றின் முடிவுகளைத் துணிச்சலுடன் ஏற்றுக்கொள்வதற்குமான மனநிலையைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும்.

இதுதான் வாழ்க்கைப் பாடத்தை சரியாகக் கற்றோமா என்று தீர்மானிக்கும் நமக்கான தேர்வு!