பிரீமியம் ஸ்டோரி

காவிரி நீர் கர்நாடகாவிலிருந்து  நுரை ததும்ப தமிழகத்துக்குள் வருகின்ற காட்சிகளைப் பார்க்கும்போது நமக்கும் மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது.  பல ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை நிரம்பி, தன் முழுக் கொள்ளளவை எட்டியிருக்கிறது.

அணைக்கு அணை போடாதீர்!


இது இனிமையான தருணம் என்றாலும், பொங்கிவரும் வெள்ளம் மொத்தமும் கடலில் கலந்துவிடுமோ என்ற அச்சம் விவசாயிகளுக்கு எழாமல் இல்லை. ‘சற்று முன்யோசனையோடு செயல்பட்டு, தடுப்பணைகளும் கதவணைகளும் கட்டியிருந்தால், தேவையான தண்ணீரைச் சேமித்திருக்கலாமே; நிலத்தடி நீரும் உயர்ந்திருக்குமே’' என்று விவசாயிகள்  தெரிவிக்கும் கவலையில் இருக்கும் உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் விழாவுக்குப் போயிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ,  “காவிரிப் பாசன மாவட்டங்கள் சமவெளிப் பகுதிகள். அங்கு தடுப்பணைகளைக் கட்டினால் அப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படும்'' என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

மூச்சுக்கு மூச்சு `இது அம்மாவின் அரசு' என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி, 04.08.2014-ல் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் வாசித்த அறிவிப்பை எப்படி மறந்தார் என்று தெரியவில்லை. “மழைக்காலங்களில் காவிரியில் வரப் பெறும் வெள்ள நீரைத் திருப்பி விடுவதற்காக, கொள்ளிடம் ஆறு பிரதானமாக ஒரு வெள்ள நீர்ப் போக்கியாகச் செயல்பட்டுவருகிறது. இந்த ஆற்றில், கீழணை தவிர, எந்த ஒரு பாசனக் கட்டுமானமும் இல்லாததால்,  வெள்ள நீர் கீழணைக்குக் கீழ்ப்புறம் சென்று கடலில் வீணாகக் கலக்கிறது. இதைத் தடுக்கும் வகையில், இந்தப் பகுதியில் ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் பல்வேறு தரப்பினர் வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை ஏற்று, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், ஆதனூர் - குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடையே கீழணையின் கீழ்ப்புறம், 0.6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட தலை மதகுகளுடன் ஒரு கதவணை 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்'' என்று கூறியிருந்தார்.

ஜெயலலிதாவின் அறிவிப்பைச் செயல்படுத்திக் கதவணை கட்டினால், கடலில் சென்று கலக்கும் நீரைத் தேக்கி, தொடர்ச்சியாக நாம் பயன்படுத்தலாம். ஒவ்வொருமுறையும் கர்நாடகத்தை எதிர்பார்க்கவேண்டிய அவசியமும் இல்லை. காவிரிப் படுகையில் நிலத்தடி நீர் உயர வேண்டுமானால் மணல் அள்ளுவதும் தடுக்கப்பட வேண்டும்.

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், காவிரிப் பிரச்னையில் அவருடைய செயல்பாடுகள் நினைவுகூர்ந்து பாராட்டப்பட வேண்டியவை. தடுப்பணை கட்டுவது தொடர்பாக ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டு நான்கு ஆண்டுகள் ஆகப்போகின்றன. ‘அம்மாவின் அரசு’ ஏன் இன்னும் அதை நிறைவேற்றவில்லை? தடுப்பணை கட்டுவது, காவிரியில் மணல் அள்ளுவதைத் தடுப்பது என்ற இரண்டு காரியங்களையும் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நிறைவேற்றுவதே, தன் தலைவிக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு