‘எங்க பாட்டி, தனியா வீட்டுல புள்ளைய பெத்துக்கிட்டு, நஞ்சுக்கொடிய வெட்டிவிட்டுட்டு, சுடுதண்ணி போட்டுக் குளிச்சு, தானே சமைச்சும் சாப்பிட்டிருக்கு தெரியுமா?'
- நம் பூட்டி, பாட்டிகள் இப்படியெல்லாம் வாழ்ந்ததைப் பற்றி அம்மாக்கள் சொல்லக்கேட்டு வியந்திருக்கிறோம்தானே!

அன்றைய தலைமுறையில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதெல்லாம் சர்வ சாதாரணம். வீட்டு வேலை, கழனி வேலை என்று எல்லாவற்றையும் ஒருசேரச் செய்துகொண்டார்கள். சத்துமிக்க விளைபொருள்களை, தாங்களே விளைவித்து உண்டு திடகாத்திரமாக வாழ்ந்தார்கள்.
இன்றைய நிலை அப்படியா இருக்கிறது? அளவுக்கு மீறி ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட காய்கறிகள், வாயுக்களைப் பயன்படுத்திச் செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட பழங்கள், ஹார்மோன் ஊசிகள் போடப்பட்ட மாமிச உணவு என்று பெரும்பாலும் விஷமாகத்தான் மாறியிருக்கிறது, நம் உணவு. எந்திரங்களின் வருகை, நம் உடல் உழைப்பை வெகுவாகக் குறைத்துவிட்டது.
இச்சூழலில், `மீண்டும் இயற்கை விவசாயத்துக்குத் திரும்புவோம்’, `துணிப்பைகளுக்கு மாறுவோம்’ என்பது போன்ற முன்னெடுப்புகள் வரவேற்கப்படவேண்டியவையே. ஆனால், ‘பெண்ணுக்கு மறுபிறப்பு’ என்று சொல்லப்படும் பிரசவத்தில் ‘ரிஸ்க்‘ எடுப்பது, மிகக் கடுமையான சவால்தானே?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
`இயற்கை முறைப் பிரசவம்’ என்று ரிஸ்க் எடுத்த ஒரு குடும்பம், இன்று தலைவியை இழந்து தவிக்கிறது. திருப்பூரைச் சேர்ந்த கார்த்திகேயன், நண்பர்கள் உதவியோடு யூட்யூப்பில் பார்த்து வீட்டிலேயே பிரசவம் செய்தபோது, ரத்தப்போக்கு அதிகமாகி இறந்துவிட்டார் அவர் மனைவி கிருத்திகா.
இன்றைக்கு 40, 50 வயதிலிருக்கும் பலரும் வீட்டிலேயே பிறந்தவர்கள்தாம். வீட்டில் பிரசவம் பார்ப்பதற்கான சூழலும், அதற்கு உதவுவதற்கான அனுபவம் வாய்ந்தவர்களும் அன்றைக்கு இருந்தனர். இன்றோ எல்லாமே தலைகீழாக மாறிக்கிடக்கும் சூழலில், அது ஆபத்தில் முடியக்கூடிய வாய்ப்புகளே அதிகம். வசதிகள் நிறைந்த மருத்துவமனைகளிலேயே, பிரசவத்தின்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக இறப்புகள் நிகழும் நிலையில், மருத்துவ உதவி இல்லாத சூழலில் பிரசவம் என்பதை முழுக்கவே தவிர்ப்பதுதான் நல்லது.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகங்கள் சிலவற்றின் பணத்தாசை காரணமாக, சிசேரியன் பிரசவங்கள் இன்று மலிந்துவிட்டன. இயற்கைமுறைப் பிரசவம் என்பதை நோக்கி சிலர் பார்வையைப் பதிக்க இதுவும் ஒரு காரணம். ஆனால், முடிந்தவரை சிசேரியனைத் தவிர்க்கும் சிறுசிறு மருத்துவமனைகளும் இங்கே இருக்கின்றன என்பதை மறுக்கமுடியாது.
இயற்கையான பிரசவம் (சுகப்பிரசவம்) முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதை மருத்துவமனைகளிலேயே நிகழ்த்த முடியும். அதைவிடுத்து, இரண்டு உயிர்களோடு விளையாடும் விளையாட்டாக அதை மாற்றிவிடக் கூடாது. நான் சொல்வது சரிதானே தோழிகளே!
உரிமையுடன்,
ஆசிரியர்
