சினிமா
Published:Updated:

வரலாற்றைக் காப்போம்! வரலாற்றை மீட்போம்!

வரலாற்றைக் காப்போம்! வரலாற்றை மீட்போம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வரலாற்றைக் காப்போம்! வரலாற்றை மீட்போம்!

வரலாற்றைக் காப்போம்! வரலாற்றை மீட்போம்!

“வரலாற்றைத் தெரிந்துகொள்ளாத ஒரு சமூகம் வரலாற்றைப் படைக்க முடியாது” என்றார் அண்ணல் அம்பேத்கர். தமிழர்களின் தொன்மையான வரலாற்றை உலகம் அறிந்துகொள்ளாதபடி போடப்பட்ட முட்டுக்கட்டைகளில் இப்போது புதிதாக ஒரு முட்டுக்கட்டையைப் போட்டுள்ளது மத்திய அரசு.

வரலாற்றைக் காப்போம்! வரலாற்றை மீட்போம்!2014-ம் ஆண்டு கீழடியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி, இந்திய வரலாற்று ஆராய்ச்சியில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. சங்ககால நாகரிகம் நகர நாகரிகம் என்பதும் சிந்துசமவெளி நாகரிகம் என்பது தமிழர் நாகரிகம், திராவிட நாகரிகம் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. 110 ஏக்கர் நிலப்பரப்பில் வெறுமனே 50 சென்ட் நிலத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியிலேயே ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முழு வீச்சுடன் அகழ்வாராய்ச்சி தொடர்ந்திருந்தால் தமிழர் நாகரிகத்தின் தொன்மை குறித்துப் பல உறுதியான ஆதாரங்கள் கிடைத்திருக்கும்.

ஆனால் ஆய்வு தொடங்கியதில் இருந்தே மத்திய அரசு தொடர்ச்சியாகத் தடைகளை ஏற்படுத்தியது. ஓராண்டோடு ஆய்வுகளை முடிக்கப் பார்த்தனர். எதிர்ப்பு வலுத்தபிறகு, மேலும் ஓராண்டு அனுமதி நீட்டிக்கப்பட்டாலும், நிதி ஒதுக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் குரல் கொடுத்ததால் ஒருவழியாக நிதி ஒதுக்கப்பட்டது. இறுதியாக, இந்த ஆய்வுகளை முன்னெடுத்த அமர்நாத் ராமகிருஷ்ணனைத் தமிழகத்திலிருந்து அசாமுக்கு மாற்றினர்.  நீதிமன்றம் வரை கீழடி பிரச்னை சென்றபிறகு, பெயரளவுக்குப் பத்துக்குழிகளைத் தோண்டிவிட்டு, நிரந்தரமாக ஆய்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.

இப்போது அடுத்த ஆபத்து வந்திருக்கிறது. எந்தவொரு அகழ்பொருள் ஆராய்ச்சியாக இருந்தாலும், எந்த அதிகாரியின் தலைமையில் பொருள்கள் அகழ்வராய்ச்சி செய்யப்பட்டு எடுக்கப்படுகிறதோ, அதே அதிகாரிதான் அது குறித்து ஆய்வறிக்கை எழுதுவார்.  ஆனால், கீழடி தொடர்பான ஆய்வறிக்கையை அமர்நாத் எழுதக்கூடாது என்றும், அவருக்குப் பதிலாக பெங்களூரு அகழாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஆய்வறிக்கையை எழுத வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.  இந்த ஆய்வறிக்கை வரலாற்று உண்மைகளைத்தான் பதிவு செய்யுமா அல்லது தங்கள் வசதிக்கேற்ப ‘வரலாறு’ எழுதப்படுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

தமிழர்களின் வரலாற்றைச் சிதைக்க நினைக்கும் மத்திய அரசு, வரலாற்றுணர்வே இல்லாமல் நாற்காலியை இறுகப்பிடித்திருக்கும் மாநில அரசு... இவற்றுக்கிடையில்தான் நம் பழந்தமிழர் நாகரிகம் சிக்கித் தவிக்கிறது. ‘`வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்றார் ஃபிடல் காஸ்ட்ரோ. இப்போது புதைந்துகிடக்கும் வரலாற்றையே விடுதலை செய்ய வேண்டிய கடமை தமிழர்களுக்கு இருக்கிறது. அதற்காக ஒன்றிணைவோம், உரத்த குரல் எழுப்புவோம்!