Published:Updated:

நெஞ்சுபொறுக்குதில்லையே!

நெஞ்சுபொறுக்குதில்லையே!

பிரீமியம் ஸ்டோரி

னிதநேயமுள்ள அனைவரின் மனசாட்சியையும் உலுக்கியிருக்கிறது கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்ட நிகழ்வு.

நெஞ்சுபொறுக்குதில்லையே!விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டுமாத கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்கிறோம் பேர்வழி என்று ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தைச் செலுத்தியிருக்கிறார்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த சுகாதார ஊழியர்கள். இதனால் அந்தப் பெண்ணும் அவரது குடும்பமும் நிலைகுலைந்துபோயிருக்கிறார்கள்.

ஒருவரிடமிருந்து ரத்தத்தை தானமாகப் பெறுவதற்கு முன்னர், ரத்ததானம் செய்ய விரும்புபவரிடமிருந்து 60 கேள்விகள் அடங்கிய ஓர் ஆவணத்தைப் பூர்த்திசெய்து வாங்க வேண்டும். ரத்தத்தை தானமாகக் கொடுப்பவரின் உடல்நிலை, குடும்ப வரலாறு, சிகிச்சை பெற்ற விவரங்கள் அனைத்தும் அந்த ஆவணத்தில் இடம்பெற வேண்டும். அதன் பிறகு, கொடையாளியின் ரத்தப்பிரிவு, ஹீமோகுளோபின் அளவு, ரத்த அழுத்தம், உடல் தகுதி, நாடித்துடிப்பு ஆகியவற்றைச் சோதித்து, திருப்தியாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே ரத்தத்தை தானம் பெற வேண்டும்.

ஒருவரிடமிருந்து ரத்தம் தானமாகப் பெறப்பட்ட பின்னர் அந்த ரத்தத்தில் ஹெச்.ஐ.வி., பால்வினை நோய்கள், மலேரியா, ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி ஆகிய 5 நோய்கள் இருக்கின்றனவா என்று பரிசோதனை செய்ய வேண்டும். 5 நோய்களும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டால், அந்த ரத்தம் சேகரிக்கப்பட்ட பையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது என்று குறிப்பிட்டு, ரத்த வங்கிகளிலிருந்து வேறு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். இந்த விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காததன் விளைவே, கர்ப்பிணிப்பெண்ணுக்கு ரத்தம் ஏற்றப்பட்ட நிகழ்வு.

ரத்த தானம் வழங்கிய இளைஞர் 2016-ம் ஆண்டிலிருந்து ரத்ததானம்  செய்துவருபவர்.  தனக்கு ஹெச்.ஐ.வி இருப்பது தெரியாமலே மீண்டும் மீண்டும் ரத்ததானம் செய்திருக்கிறார். வெளிநாடு செல்வதற்காக  யதேச்சையாக அவர் ரத்தப் பரிசோதனை செய்தபோதுதான், தான் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்ற உண்மை அவருக்குத் தெரியவந்திருக்கிறது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர் தெரிவித்தபிறகுதான், இந்தத் துயரச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இந்தக் குளறுபடிகள் அனைத்துக்கும் காரணம் அங்கு வேலை பார்த்த தற்காலிக ஊழியர்கள்தாம் என்று சொல்லி அவர்களைப் பணியிடை நீக்கம் செய்ததோடு தன் கடமையை முடித்துக்கொண்டது `பொறுப்புள்ள’ இந்த அரசு. ஆனால், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியரோ, ‘`தானமாகப் பெறப்படும் ரத்தத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியாது. எப்படி ஆய்வு செய்வது என்ற பயிற்சியும் எங்களுக்கு அளிக்கப்படவில்லை’’ என்று கூறியிருக்கிறார். இந்த விபரீதத்துக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் தற்காலிக ஊழியர்களா அல்லது இதுபோன்ற முக்கியமான விஷயங்களைக் கையாளவேண்டிய துறைகளில்கூட பயிற்சிபெறாத தற்காலிக ஊழியர்களை இட்டு நிரப்பும் அரசின் செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியவர்களா?

சாத்தூர் சம்பவத்தின் சோகம் அகலுவதற்குள், சென்னை மாங்காட்டைச் சேர்ந்த கர்ப்பிணிக்குக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றியதால் ஹெச்.ஐ.வி. பாதித்திருக்கிறது என்று அடுத்த விவகாரம் கிளம்பியிருக்கிறது. ‘மருத்துவத்துறையில் தேசியக் குறியீடுகள் தாண்டி சர்வதேசக் குறியீடுகளையும் எட்டிவிட்டோம்’ என்று மேடைக்கு மேடை மார்தட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் இதுபோன்ற அலட்சியங்களைத் தடுக்க என்ன செய்யப்போகிறார்கள்? 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு