தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

நமக்குள்ளே...

பிறந்த குழந்தையை முதன்முறை தொட்டுத் தூக்கும்போதே ஆரம்பித்துவிடுகிறது, ஒருவருடைய உருவத்தின், நிறத்தின் மீதான நம் கிண்டலும் கேலியும். ‘காதுப்பக்கம் கறுப்பா இருக்கே... அம்மாவைப் போல கருவாச்சியோ’ என்று யாரோ ஒரு நண்பரின், உறவினரின் கேலிப் பேச்சைக் கேட்காமல் பெரும்பாலான குழந்தைகள் மருத்துவமனை வாசல்கூடத் தாண்டுவதில்லை.

இங்கே ஒருவருக்குக் கிடைக்கும் மரியாதை என்பது அவருடைய நிறம், உயரம், உடல்வாகு போன்றவற்றைப் பொறுத்தே அமைகிறது. ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான், குழந்தைக் காய்ச்சலும் குண்டன் காய்ச்சலும் பொல்லாதது’ என்பதுபோல வகை வகையாக உருவத்தை மையமாக வைத்து கற்பிதங்கள் வேறு!

நமக்குள்ளே...

மழலை மாநிறமாக இருந்தாலே, ‘நீ எங்களைப் போல இல்லையே... உன்னைத் தவிட்டுக்கு வாங்கி வந்தோமாக்கும்!’ என்று ‘சும்மானாச்சுக்கும்’ கேலி செய்யும் பெற்றோர், உறவினர் தாங்கள் செய்வது தவறு என்றே உணர்வதில்லை. அந்தக் குழந்தையின் மனதில், தவறான எண்ணங்களை விதைக்கிறோம் என்பதையும் உணர்வதில்லை.

இப்படிப்பட்ட விஷச்செடிகளை உரம்போட்டு வளர்க்கின்ற களங்களாக நம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் இருப்பதுதான் வேதனை. அங்கு எள்ளலுக்கும் நகைப்புக்கும் ஆளாவது பெரும்பாலும் உருவமும் உடல் உறுப்புகளும்தாம். ஒருவரது புற அழகு குறித்த விமர்சனங்களும் கிண்டலும் சம்பந்தப்பட்டவர்களை எவ்வளவு பாதிக்கும் என்பதை பெரும்பாலானவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. சிறு புன்னகையுடன் அவர்களில் பலர் இந்தக் கேலியை, கிண்டலைக் கடந்து சென்றாலும், அதன் வலி அவர்களை விட்டு அத்தனை எளிதில் மறைவதில்லை.

இந்த எள்ளல், வாழும் காலம் முழுக்க நிழலாக அவர்களைத் தொடர்கிறது. பணியிடம், பொதுவெளி, அரசியல் என்று எல்லாத் தளங்களிலும் இந்தத் தனி நபர் உருவ எள்ளல் பரவிக் கிடக்கிறது. கணநேரக் கிளுகிளுப்பைத் தவிர வேறு எதையும் தரப்போவதில்லை என்பது தெரிந்திருந்தும், ஏன் பிறரைக் கேலி செய்யும் எண்ணம் பெரும்பாலானவர்களிடம் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறது? ஒன்று... ‘நம்மைவிட எளியவரைக் கேலி செய்தால் என்ன தவறு?’ என்ற மேட்டிமைத்தனம். இன்னொன்று... இவனோ/இவளோ `நம்மைவிட வாழ்க்கையில் உயர்ந்துவிடக் கூடாதே’ என்கிற பொறாமை. இதுதான் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அடுத்தவரை உருவம் கொண்டு மட்டம் தட்ட வைக்கிறது.

‘இதிலென்ன இருக்கிறது, சும்மா ஜாலிக்குத்தானே’ என்று வெறுமனே இதைக் கடந்து செல்லத்தான் பலரும் நினைப்போம். ஆனால், ‘அது சரிதானா?’ என்று ஒவ்வொருவரும் தமக்குள்ளேயே விவாதிப்போம்.

‘இதுவும் ஒருவகை தீண்டாமையே’ என்று சிந்திக்கவாவது தொடங்குவோம்... ‘ஒரு நாள் மொத்தமாக இதைத் துடைத்தொழிப்போம்’ என்கிற நம்பிக்கையோடு!

நமக்குள்ளே...