தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

நமக்குள்ளே...

‘இன்னும் எத்தனை நூற்றாண்டுகளாகுமோ பெண்களை போகப் பொருளாகக் கருதும் இந்தச் சமூகம் மாறுவதற்கு..?’ என்கிற எண்ணத்தை மீண்டும் தலைதூக்கச் செய்திருக்கின்றன, ஒரு திரைப்படத்தின் போஸ்டரும் மற்றொரு திரைப்படத்தின் டீசரும்.

நமக்குள்ளே...

சில தினங்களுக்கு முன், சென்னை நகரம் முழுக்க திடீரெனத் தலைகாட்டியது... பெண்களை மோசமாகச் சித்திரிக்கும் இரட்டை அர்த்தம் வசனம்கொண்ட அந்தப் போஸ்டர். ‘திரைப்படத்தை விளம்பரப்படுத்துகிறோம்’ என்று ஊர்முழுக்க போஸ்டர் ஒட்டிய நிறுவனம், அதைப் பார்க்கும் பெண்களின் மனநிலை பாதிப்படையுமே என்று சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை. இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாக ஓடும் திரைப்படத்தின் டீசரும் இதே ரகம்தான். இதில் இடம்பெற்றிருக்கும் நடிகைகள் கண்மூடித்தனமாக மது அருந்துகிறார்கள், போதையில் கலாட்டா செய்கிறார்கள், உடல் மற்றும் பாலியல் உறவு மீதான விமர்சனங்களை அருவருக்கத்தக்க வகையில் முன்வைக்கிறார்கள். யூடியூப், ஃபேஸ்புக் என்று நீக்கமற நிறைந்திருக்கின்றன இந்த டீசர் காட்சிகள்.

மக்களின் கவனத்தைக் கவர வேண்டும் என்கிற முனைப்புடன் விளம்பரங்கள் வெளிவருவதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், எதற்கும் ஓர் எல்லை உண்டுதானே! ‘புகைபிடிப்பதும் மது அருந்துவதும் உடல்நலத்துக்குக் கேடு’ என்கிற பொறுப்புத்துறப்பு அறிவிப்புடன் இதுபோன்ற காட்சிகள் திரைகளில் ஒளிர்கின்றன. இது, இன்றைய திரைப்படங்களின் வெற்றிக்கு இன்றியமையாதது என்கிற எண்ணம் சில படைப்பாளிகளிடம் திடமாக இருக்கிறது.

இரட்டை அர்த்த வசனங்கள், பாலியல் காட்சிகளுடன் வரும் படங்கள், ‘ஏ’ சான்றிதழுடன் வெளிவருவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அதையே பெண்கள் செய்வதாகக் காட்டும்போது பெரும்தாக்கத்தை உருவாக்குகிறது. ஆணோ, பெண்ணோ... யார் இதுபோன்ற ஒழுங்கற்ற செயல்களில் ஈடுபட்டாலும் தவறுதானே. ஆனால், பெண் இவற்றைச் செய்வதுபோல முன்னிலைப்படுத்துவது மலிவான விளம்பர யுக்தி என்பதே உண்மை. எவ்விதக் கட்டுப்பாடுமற்ற டீசர்கள், தெருமுனை போஸ்டர்கள் போன்றவற்றில் விஷம்போலப் பரவும் ஆபாசமும் ஒழுங்கின்மையும் கடும் கண்டனத்துக்குரியது.

நல்ல கருத்துச் செறிவுள்ள படங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கும் இந்தச் சூழலில், மீண்டும் பெண்களை இழிவுபடுத்தும் படங்கள் வெளிவருவது, நல்ல படைப்பாளிகளின் படைப்புகளை ஏளனப்படுத்துவதாகவே இருக்கும். படைப்பாளிகள் குறைந்தபட்ச அறத்துடன் தங்கள் படைப்புகளை வெளிக்கொணர்வது முக்கியம்.

தெரியாமல் செய்திருந்தால், மன்னிப்பு கோருவதில் நியாயமிருக்கும். ஆனால், திட்டமிட்டே செய்துவிட்டு மன்னிப்பு கோருவது... ஒட்டுமொத்த சமூகத்தையே கேவலப்படுத்தும் விஷயமே!

இனியும் தொடர வேண்டாமே சீர்கேடு!

நமக்குள்ளே...