நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பொருளாதார வளர்ச்சியில் கூடுதல் கவனம் தேவை!

பொருளாதார வளர்ச்சியில் கூடுதல் கவனம் தேவை!
பிரீமியம் ஸ்டோரி
News
பொருளாதார வளர்ச்சியில் கூடுதல் கவனம் தேவை!

பொருளாதார வளர்ச்சியில் கூடுதல் கவனம் தேவை!

ஹலோ வாசகர்களே..!

பொருளாதார வளர்ச்சியில் கூடுதல் கவனம் தேவை!


நமது பொருளாதார வளர்ச்சி குறித்து வெளியாகியிருக்கும் புள்ளிவிவரங்கள் உண்மையிலேயே நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதை மறுக்க முடியாது. காரணம், நடப்பு 2018-19-ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் (அக்டோபர் - டிசம்பர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பி 6.6 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என மத்திய புள்ளிவிவரத் துறை அலுவலகம் சொல்லியிருக்கிறது. இதனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவான வளர்ச்சியை நமது ஜி.டி.பி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

முக்கியத் துறைகளின் (Core sector) வளர்ச்சியானது கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. மின் உற்பத்தித் துறையின் வளர்ச்சி கடந்த 71 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது பெரும் பீதியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. விவசாயத் துறையின் வளர்ச்சியும் 5 சதவிகிதத்திலிருந்து 2.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் கூடுதல் கவனம் தேவை!மத்திய அரசாங்கம் செய்யும் செலவு இந்த நிதியாண்டில் கணிசமாகக் குறைந்ததன் விளைவாகவே நமது ஜி.டி.பி வளர்ச்சி சிறிது இறக்கம் கண்டிருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் சிலர் காரணம் சொல்கிறார்கள். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அரசு செய்யும் செலவு என்பது மிக மிக முக்கியம்தான். ஆனால், அரசின் செலவு குறையும்பட்சத்தில் பொருளாதார வளர்ச்சியும் குறையும் என்கிற நிலை தொடர்வது நல்லதல்ல என்பதால், இனிவரும் காலத்திலாவது இது மாற்றப்பட வேண்டும்.

தற்போது வெளியான புள்ளிவிவரங்களில் இரு நல்ல விஷயங்களைப் பார்க்க முடிகிறது. ஒன்று, தனியார் துறையின் முதலீடு அதிகரிக்கத் தொடங்கி யிருப்பது. இரண்டாவது, நிகர மூலதன உருவாக்கம் (Gross Fixed Capital  Formation) கடந்த ஆண்டைவிட உயர்ந்திருப்பது. உற்பத்தித் துறையும் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த இரண்டு விஷயங்களில் இனிவரும் நாள்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து, பொருளாதாரம் வளர்ச்சி காணும் என்பது நிச்சயம்.

ஜி.டி.பி வளர்ச்சி குறித்த இந்தப் புள்ளிவிவரங்களைப் பார்த்து கவலை அடைவதற்குப் பதில், பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் என்ன என்பதில் மத்திய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். காரணம், ஜி.டி.பி குறித்த புள்ளிவிவரங்கள் எதைக் காட்டுகிறது எனில், பொருளாதாரம் வளர்ச்சி காணத் தேவையான திட்டங்களைத் தீட்டுவதில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதைத்தான்.

விரைவில் பொதுத் தேர்தல் நடக்கவிருப்பதால், அடுத்த இரு மாதங்களில் பொருளாதார வளர்ச்சியானது கொஞ்சம் மெதுவாகவே இருக்கும். ஆனால், தேர்தல் முடிந்தபிறகு பொருளாதார வளர்ச்சியில் நமது மத்திய அரசாங்கம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி, ஜி.டி.பி குறைந்தபட்சம் 8 சதவிகிதத்துக்கு மேல் வளர்ச்சி காணுகிற மாதிரி பாடுபட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

- ஆசிரியர்