பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

தேவை உடனடித் தீர்வுகள் அல்ல!

தேவை உடனடித் தீர்வுகள் அல்ல!
பிரீமியம் ஸ்டோரி
News
தேவை உடனடித் தீர்வுகள் அல்ல!

தேவை உடனடித் தீர்வுகள் அல்ல!

ற்கெனவே தண்ணீர்ப் பிரச்னையால் தமிழகம் தவித்துக்கொண்டிருக்கும் சூழலில் இன்னொரு பிரச்னையும் தமிழகத்தை வாட்டி வதைக்கத் தொடங்கியிருக்கிறது. மின்வெட்டுப் பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது. அறிவிக்கப்படாத மின்வெட்டு தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் நிலவுகிறது.

தேவை உடனடித் தீர்வுகள் அல்ல!

ஒருபுறம்  கழிவுநீரை மறுசுழற்சி செய்து குடிநீர் ஆக்கும் திட்டம் அறிவிக்கப்படுகிறது. இன்னொரு புறம், கடல்நீரைக் குடிநீராக்கும் மூன்றாவது சுத்திகரிப்பு ஆலைக்கு அடிக்கல் நாட்டவிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இவையெல்லாம் வரவேற்கத்தகுந்த விஷயங்கள்தான். ஆனால் இவையெல்லாம் இப்போதுதான் அறிவிக்கப்பட வேண்டிய விஷயங்களா என்ற கேள்வி எழுகிறது.வருமுன் காப்பது மருத்துவத்தின் அடிப்படை மட்டுமல்ல, மக்கள்நல அரசின் அடிப்படையும்கூட.

ஒவ்வோர் ஆண்டும் கோடைக்காலம் வரும்; கோடைக்காலம் வந்தாலே தண்ணீர்ப்பஞ்சமும் மின்வெட்டும் வரும் என்பது தமிழக ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா?  இரண்டாண்டுக்காலம் ஆட்சியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு, வறட்சியையும் மின்வெட்டையும் எதிர்கொள்ள முன்கூட்டியே தீட்டிய திட்டங்கள் என்ன? நாடாளுமன்றத் தேர்தலிலும் இடைத்தேர்தலிலும் பிரசாரத்தில் காட்டிய அக்கறையில், தங்கள் ஆட்சியைக் காப்பாற்றியதில் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒருபங்காவது குடிநீர்ப் பிரச்னைகளையும் மின்வெட்டுப் பிரச்னைகளையும் தீர்க்கக் காட்டியிருக்க வேண்டாமா?

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களாவது வெறும் அறிவிப்பாக இருக்குமா, நடைமுறைக்கு வருமா என்ற சந்தேகம் மக்களுக்கு எழத்தானே செய்யும்? இன்னும் இரண்டாண்டுகள் தமிழக அரசுக்கு இருக்கிறது. அடுத்த சட்டமன்றத் தேர்தலும் இதேபோல் இன்னொரு கோடைக்காலத்தில்தான் வரப்போகிறது. மக்களிடம் வாக்கு வாங்கச் செல்வதற்கு முன் தண்ணீர்ப் பிரச்னையையும் மின்வெட்டுப் பிரச்னையையும் சரிசெய்துவிட்டுப் போனால்தான் தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்பதைத் தமிழக ஆட்சியாளர்கள் உணரவில்லையா?

ஓர் அரசுக்குத் தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். தீட்டப்படும் திட்டங்களில் அந்தத் தொலைநோக்குப் பார்வை பிரதிபலிக்கப்பட வேண்டும். அதைச் செயல்படுத்துவதற்கான முனைப்பும் அக்கறையும் வேண்டும். உடனடித் தீர்வுகள் எப்போதும் பிரச்னையை நிரந்தரமாகத் தீர்க்க உதவாது. இன்னுமிருக்கும் இரண்டாண்டுகளிலாவது எதிர்காலத்துக்கான திட்டங்கள் வகுக்கப்படாவிட்டால், எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் எதிர்காலமும் இருட்டாகத்தான் இருக்கும்.