Published:Updated:

புதிய தொழில் கொள்கை வளர்ச்சிக்கு வழிவகுக்கட்டும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புதிய தொழில் கொள்கை வளர்ச்சிக்கு வழிவகுக்கட்டும்!
புதிய தொழில் கொள்கை வளர்ச்சிக்கு வழிவகுக்கட்டும்!

புதிய தொழில் கொள்கை வளர்ச்சிக்கு வழிவகுக்கட்டும்!

பிரீமியம் ஸ்டோரி

ஹலோ வாசகர்களே..!

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான புதிய அரசின் நாடாளு மன்ற உறுப்பினர்களின் முதல் கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அரசாங்கம் கூடிய விரைவில் கொண்டுவரவிருக்கும்  புதிய தொழில் கொள்கை பற்றியும் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசாங்கம் அறிவிக்கவிருக்கும் திட்டங்கள் குறித்தும் விவரித்தார்.

புதிய தொழில் கொள்கை வளர்ச்சிக்கு வழிவகுக்கட்டும்!

குடியரசுத் தலைவரின் இந்தப் பேச்சு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்றாலும், மத்திய அரசாங்கம் அறிவிக்கவிருக்கும் புதிய தொழில் கொள்கை யானது தொழில் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்கச் செய்வதாக இருக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு வாய்ப்பில்லை. காரணம், நமது பொருளாதார வளர்ச்சி இன்று மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. ஓராண்டுக்குமுன் 8 சதவிகிதமாக இருந்த நமது ஜி.டி.பி வளர்ச்சி, கடந்த காலாண்டில் 5.8% அளவுக்குக் குறைந்திருக்கிறது. அடுத்துவரும் ஆண்டுகளில் அதிகபட்சமாக 7 சதவிகிதத்துக்குள் மட்டுமே வளர்ச்சி இருக்கும் என்பதே பல நிறுவனங்களின் கணிப்பு. ‘‘பொருளாதார நிலை மோசமாகிவிட்டது; அதனால்தான் 0.25% மட்டுமே ரெப்போ விகிதத்தைக் குறைக்க ஒப்புதல் தெரிவிக்கிறேன்’’ என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் சொன்னதாக ஆர்.பி.ஐ குறிப்பு வெளியானதிலிருந்து தொழில் நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்திருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல, வேலைவாய்ப்பின்மையும் கடந்த பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. 30 கோடி பேருக்கு முத்ரா கடன், சொத்து அடமானம் எதுவும் இல்லாமல் ரூ.50 லட்சம் தொழில் கடன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50,000 ஸ்டார்ட்அப்கள் எனப் புதிதாக அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் பலவும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றாலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிற அளவுக்கு புதிய தொழில் கொள்கையைத் தரமானதாக உருவாக்கி மத்திய அரசாங்கம் வெளியிட வேண்டும்.

வருகிற 2024-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக மாறவேண்டும் என்கிற இலக்கினையும் நிர்ணயித்திருக்கிறார் குடியரசுத் தலைவர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாம் இந்த இலக்கினை அடையவேண்டுமெனில், நமது ஜி.டி.பி வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி காணவேண்டும். அதற்கான வாய்ப்புகள் ஏதும் இருக்கிறதா?

பல்வேறு பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு, பொருளாதார வளர்ச்சி வேகத்தைத் துரிதப்படுத்துகிற மாதிரி புதிய தொழில் கொள்கையை உருவாக்குவது புதிய அரசாங்கத்துக்குமுன் உள்ள பெரிய சவால்தான். ஆனால், இந்தச் சவாலை எதிர்கொண்டு ஜெயிக்கிற துணிவும் தெளிவும் பிரதமர் மோடிக்கு உண்டு என்பதால்தான், மக்கள் அவரிடம் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பினைத் தந்திருக்கிறார்கள். மக்களின் இந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்றி, பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகத்தைத் துரிதப்படுத்தும் வகையில் புதிய தொழில் கொள்கை அமையட்டும்!

    - ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு