சினிமா
தொடர்கள்
Published:Updated:

டாஸ்மாக் கொலைகளைத் தடுப்போம்!

டாஸ்மாக் கொலைகளைத் தடுப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
News
டாஸ்மாக் கொலைகளைத் தடுப்போம்!

டாஸ்மாக் கொலைகளைத் தடுப்போம்!

மிழகத்தில் தண்ணீருக்குத்தான் பஞ்சமே தவிர, ‘தண்ணி’க்கு எப்போதும் பஞ்சமில்லை. தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து, அதற்கு விற்பனை இலக்கும் நிர்ணயிக்கும் தமிழக அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மை ஏராளமான உயிர்களைக் குடித்திருக்கிறது; ஏராளமான ஆண்களைக் குடிநோயாளி ஆக்கியிருக்கிறது; ஏராளமான குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது.  டாஸ்மாக்கால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எத்தனையோ சாட்சியங்களைக் கண்டிருக்கிறோம். சமீபத்திய ரத்த சாட்சியம் மருத்துவர் ரமேஷ்.

டாஸ்மாக் கொலைகளைத் தடுப்போம்!

கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் வெறுமனே உடல்நல மருத்துவர் மட்டுமல்லர், மக்களின் பிரச்னைகளுக்காய்க் குரல் கொடுக்கும் மக்கள் மருத்துவரும்கூட. பழங்குடி மக்கள்மீது கொண்ட அக்கறையால் தன் மகளை ஆனைக்கட்டியில் உள்ள பழங்குடிப் பள்ளியில் சேர்த்துப் படிக்கவைத்தார். மகளைப் பள்ளியிலிருந்து அழைத்துவர இருசக்கர வாகனத்தில் சென்ற ரமேஷின் மனைவி ஷோபனா, தன் உயிரை இழந்தார். காரணம், டாஸ்மாக். குடிபோதையில் வந்த இளைஞர்களால் விபத்துக்கு ஆளாகி ஷோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரமேஷின் மகள் காயங்களுடன் உயிர் தப்பினார்.

அந்த டாஸ்மாக் கடையை அகற்றும்வரை மனைவியின் சடலத்தை எடுக்க அனுமதிக்க மாட்டேன் என்று பழங்குடி மக்களுடன் போராட்டம் நடத்தினார் ரமேஷ். காண்பவர்களை எல்லாம் கலங்கவைத்தது அந்தக் காட்சி. ஒட்டுமொத்தத் தமிழக அவலங்களில் இது ஒரு துயரக்காட்சி. டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட வேண்டுமானால் இப்படி உயிர்கள் போவது ஒன்றுதான் வழியா? மக்களை நேசித்த ஒரு மருத்துவரை மனைவியில்லாமல் தவிக்கவிட்ட டாஸ்மாக், தமிழகத்துக்கு இன்னும் தேவையா?

மதுவுக்கு எதிராக உரத்து ஒலிக்கும் குரல்களில் ஒன்று மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினியுடையது. தொடர்ச்சியாக மதுவிலக்குக்கு எதிராகப் போராடிவரும் நந்தினி, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருமணம் நடக்க ஒருவாரமே இருக்கும் நிலையில் அவர் சிறைக்குள். நீதிமன்றத்தில் அவரது அணுகுமுறை தவறானதாக இருக்கலாம். ஆனால் அவரது அக்கறை உண்மையானது. அது மக்கள்நலன் பேணும் அனைவரின் அக்கறையும்கூட. நீதிமன்றம் அவரை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்.

சசிபெருமாள் இறந்தபோது டாஸ்மாக் கடைகளை மூடுவதைப் பற்றிப் பேசினோம். ‘டாஸ்மாக்கை மூடு’ என்று தமிழக அரசை எதிர்த்துப் பாடியதற்காகப் பாடகர் கோவன் கைதுசெய்யப்பட்டபோது, டாஸ்மாக் கடைகளை மூடுவதைப் பற்றிப் பேசினோம். இப்போது ரமேஷ் மனைவி இறந்ததை முன்னிட்டும் நந்தினி கைதை முன்னிட்டும் டாஸ்மாக் பற்றிப் பேசுகிறோம்.

ஆனால் இப்போதைக்குப் பேசிவிட்டு, வேறு பிரச்னைகளில் மூழ்கிவிடுவோம் என்ற தைரியத்தில்தான் தமிழக அரசு டாஸ்மாக் வியாபாரத்தை நடத்துகிறது. தமிழகமே ஒன்றுபட்டு உரத்த குரலில் மீண்டும் மீண்டும் அழுத்தமாகச் சொல்வோம்.

தமிழக அரசே, டாஸ்மாக்கை மூடு!