பிரீமியம் ஸ்டோரி

சீனா விரிக்கும் 'தொடர்பு' வலை!

அன்பு வாசகர்களே

பீரங்கி கொண்டு எதிரி நாட்டைத் தகர்ப்பது பழைய பாணி. இப்போதெல்லாம் பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தி அஸ்திவாரத்தை ஆடச் செய்வதுதான் நவீன யுத்த முறை! அந்த வகையில், இந்தியாவிடம் அடிக்கடி உறுமிக்கொண்டிருக்கும் சீனா ஒரு 'தொடர்பு’ வலை விரித்திருப்பதாக எச்சரிக்கிறது 'ரா’ புலனாய்வு அமைப்பு.

சீன தேசத்தின் அரசு வங்கி கடந்த ஆண்டு ஆர்.காம் (ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்) நிறுவனத்திற்கு 600 மில்லியன் டாலரை குறைந்த வட்டிக்கு கடனாகத் தந்தது. அதோடு, ஆர்.காமிற்குத் தேவையான இயந்திரங்களை சீனாவின் ஹாவய் நிறுவனத்தின் மூலம் தர 'கரிசனத்தோடு' ஒப்புக்கொண்டது.

##~##
'சீனாவின் இந்த நவீன இயந்திரங்களை இந்தியாவுக்குள் எதை நம்பி அனுமதிப்பது? இதனால் நாட்டின் ரகசியங்களும் பாதுகாப்பும் சீனாவின் கையில் சிக்கும் ஆபத்து ஏற்படாதா?' என்கிற கேள்வியை இந்திய தொலைத்தொடர்புத் துறையிடம் எழுப்பியிருக்கிறது 'ரா’.  

சீனத்து பாதுகாப்புத் துறையுடன் உறவாடும் ஹாவய் மீது சந்தேகப் பார்வை விழுவது புதிதல்ல! ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் இந்நிறுவனத்திற்கு ஏற்கெனவே தடை விதித்துள்ளன. நம் பி.எஸ்.என்.எல். அமைப்புகூட இந்நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை இரண்டாண்டுகளுக்கு முன் ரத்து செய்தது. இத்தனைக்குப் பிறகும் நம் நாட்டு தனியார் நிறுவனங்கள் இதனுடன் ஒப்பந்தம் செய்வதும், அதை மத்திய தொலைத்தொடர்புத் துறை கண்டுகொள்ளாமல் இருப்பதும் எதில் சேர்த்தி?

பொருள் விற்பதாகச் சொல்லித்தான் உள்ளே வந்து இந்த நாட்டையே அபகரித்தார்கள் வெள்ளையர்கள். அப்போது துண்டு துண்டாக பிரிந்து கிடந்த மன்னர்களால் அதைத் தட்டிக்கேட்க முடியவில்லை. இன்று ஒரு குடையின் கீழ் நடக்கிற ஜனநாயக ஆட்சியிலும் அதேபோல் அனுமதித்து, இன்னும் ஒரு முந்நூறு ஆண்டுகளுக்கு சீனர்களுக்கு அடிமை சாசனம் எழுதித் தரலாம் என்ற எண்ணம் மத்தியில் ஆளும் மன்னர்களுக்கு இருக்கிறதோ?!

-ஆசிரியர்.

அன்பு வாசகர்களே
அன்பு வாசகர்களே
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு