பிரீமியம் ஸ்டோரி

யூ.டி.ஐ.க்கு திண்டுக்கல் பூட்டு!

அன்பு வாசகர்களே

துரை ஆதீனமாகட்டும், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களாகட்டும் தலைமைப் பதவிக்கு யாரை நியமிப்பது என்பதில்தான் பல நூறு குளறுபடிகள். அண்ணன், தம்பி, மாமன், மச்சான் என உற்றார் உறவினர்களை தலைமைப் பதவிக்கு கொண்டுவர நினைக்கும் இக்குறுகிய சிந்தனைதான் நம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை.  

மியூச்சுவல் ஃபண்டுகளின் முன்னோடியான யூ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இன்று சீரழியக் காரணம் இந்த குடும்ப சிபாரிசுதான். இதன் சி.இ.ஓ.வாக இருந்த யூ.கே.சின்ஹா, செபியின் தலைவராக ஆனபிறகு, கடந்த 15 மாதங்களாக அப்பதவிக்கு யாரையும் நியமிக்காமல் காலம் கடத்தி வருகிறது நிதி அமைச்சகம். இப்பதவியை தன் சகோதரர் கோஸ்லாவுக்கு தரவேண்டும் என்று கேட்கிறார் மத்திய நிதி அமைச்சரின் உதவியாளர் ஒமிதா பால். யூ.டி.ஐ.யில் அதிக பங்குகளை வைத்துள்ள டி ரோ ப்ரைஸ் என்கிற வெளிநாட்டு நிறுவனமும், எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., ஜி.ஐ.சி. போன்ற உள்நாட்டு நிறுவனங்களும் இதனை கடுமையாக எதிர்க்கின்றன.

##~##
இது இப்படியிருக்க, தலைமை மார்க்கெட் அதிகாரியாக இருந்தவரையும் வேலையிலிருந்து நீக்கப்போவதாக ஆங்கில தினசரி ஒன்றில் தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த பதினைந்து மாதங்களில் இந்த ஃபண்ட் நிர்வாகம் செய்யும் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 10% குறைந்ததே இதற்கு காரணம் என்கிறார்கள். தலைமைப் பதவியில் யாரும் இல்லாத காரணத்தினால்  யூ.டி.ஐ.யினால் புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய முடியாமல், இன்றைக்கு ஐந்தாம் இடத்திற்கு சறுக்கியதற்கு மார்க்கெட்டிங் அதிகாரி எப்படி பொறுப்பாவார்?  

இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் யூ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்டிற்கு திண்டுக்கல் பூட்டு போடப்படும் நிலை உருவாகவே செய்யும். இந்தியாவில் முதன் முதலாக அரசாங்கமே தொடங்கிய ஒரு ஃபண்ட் நிறுவனம் மூடப்பட்டால், அது அரசுக்குத்தானே கேவலம். தன்னைச் சுற்றி நடக்கும் எல்லா தவறுகளையும் பார்த்து மௌன குருவாக இருக்க மன்மோகன் சிங்கினால் எப்படித்தான் முடிகிறதோ!

-ஆசிரியர்

அன்பு வாசகர்களே
அன்பு வாசகர்களே
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு