பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...
##~##

''பள்ளிக்கூட வயதிலேயே இந்தக் குழந்தைகள் எல்லாம் செல்போன்களை தாறுமாறாக பயன்படுத்துவது பெருகிவிட்டது. குறிப்பாக, பிரபலமாக இருக்கும் எங்கள் பள்ளியில், இதன் மூலமாக அடிக்கடி பிரச்னைகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில மாதங்களாக, 'இந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவார்கள்?' என்றே தினசரி பேசிக் கொண்டிருப்போம்.

இந்தச் சூழலில் கடந்த இதழில் 'பள்ளி மாணவர்களிடமும் பளபளக்கும் செல்போன், வளர்ச்சியா... வீழ்ச்சியா?' என்ற தலைப்பில் நீங்கள் வெளியிட்டிருந்த விவாதக் கட்டுரை... எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதோடு, 'இனி, பூனைக்கு மணி கட்டப்பட்டுவிடும்' என்கிற நிம்மதி பெருமூச்சையும் விட வைத்தது. அதேபோல, அடுத்த வாரத்திலேயே... 'பள்ளி மாணவ - மாணவிகள் செல்போன் பயன்படுத்தத் தடை! மீறினால் கடும் நடவடிக்கை!' என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி வைத்துவிட்டது தமிழக பள்ளிக் கல்வித்துறை. ஆசிரியர் வர்க்கத்தின் சார்பில், உங்களுக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும்''

- கோவையில் இருக்கும் பிரபல பள்ளி ஒன்றில் பணியாற்றும் அந்த ஆசிரியையின் பேச்சில், அக்கறை பொங்கி வழிந்தது.

பள்ளிக்கூடங்களில் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று அரசு தரப்பிலிருந்து முன்பே வலியுறுத்தப்பட்டிருந்தாலும், இதுவும் 'ஹெல்மெட்' கதையாகத்தான் இருந்தது. விளைவு.. 'வழக்கு எண் 18/9' சினிமா போல, பிஞ்சுகளின் மனதில் நஞ்சு கலக்கும் வேலையை தாராளமாக செய்ய ஆரம்பித்துவிட்டது அந்த அறிவியல் சாதனம்! இது, பள்ளி மாணவ - மாணவிகளில் சிலருக்கு உண்மையிலேயே ஆபத்பாந்தவனாக இருக்கலாம். ஆனால், பெரும்பாலானோரை 'புதைகுழி'யில் புதைக்கிறது என்பதே உண்மை!

காலம் கடந்தாவது இதை உணர்ந்து, 'மாணவ - மாணவிகளின் புத்தகப்பையை ஆசிரியர்கள் சோதனை போடுவார்கள். செல்போன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்... மறுநாள் பெற்றோருடன் பள்ளியில் ஆஜராக வேண்டியிருக்கும்' என்றெல்லாம் தற்போது பள்ளிக் கல்வித்துறை கறார் காட்டியிருப்பது, பெற்றோர்களின் வயிற்றில் பால் வார்க்கும் விஷயம்தான்!

மனதளவில் மட்டுமல்ல... உடல் அளவிலும் கதிர்வீச்சு போன்ற பல பாதிப்புகளை ஏற்படுத்துகிற செல்போன்களிடம் இருந்து நம் பிள்ளைகளைக் காப்பாற்ற இதுவே மிகச்சிறந்த வழி என்பதால், நாமும் வரவேற்போம் தோழிகளே!

உரிமையுடன் உங்கள்

நமக்குள்ளே...


ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு