பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே
##~##

'கொடுமை கொடுமைனு கோயிலுக்குப் போனாளாம். அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம்' என்கிற சொலவடைதான் என் நினைவுக்கு வந்தது... தனக்குத் தெரிந்த ஒரு பெண் பற்றி, என் தோழி சொன்ன கதையைக் கேட்டதும்!

'கணவர், பிஸினஸ்மேன்... ஓயாமல் வெளியில் அலைந்து கொண்டிருப்பார். ஒரே மகனும் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறான். தனிமையின் கொடுமையிலிருந்து தப்பிக்க... பொழுதுபோக்காக 'ஃபேஸ்புக்'கில் அக்கவுன்ட் ஆரம்பித்தார் அந்தப் பெண். ஒரு கட்டத்தில், தன் மனக்குறையை அங்கே இறக்கி வைக்க... ஆறுதல் சொல்லும்விதமாக வந்த சில ஆண்கள், நைஸாக இவளுடைய போன் நம்பரை வாங்கி... நேரடியாகவே பேசினர். இந்த ஆறுதல் பேச்சு பிடித்துப் போக, இவளும் தொடர்ந்திருக்கிறாள்.

இரவு, பகல் பாராமல் ஃபேஸ்புக்கும்... போனுமாகக் கிடந்தவளுக்கு... திடீர் ஷாக். அவர்களில் ஒருவர், அவளுடைய நடத்தை பற்றி மனம்போன போக்கில் 'ஃபேஸ்புக்'கில் பரப்ப... இப்போது, முன்பைவிட கூடுதல் மனஅழுத்தத்துக்கு ஆளாகி கூனிக்குறுகிக் கிடக்கிறாள். ஃபேஸ்புக்கில் உலா வரும் கணவருக்கும் தெரிந்து, அவர் அதை நம்புவதா... வேண்டாமா... என்று குழம்பி... குடும்பமே கலகலத்துப் போய் கிடக்கிறது.'

தோழி சொன்ன கதையைக் கேட்டதுமே... 'ஐயோ சமூக வலைதளங்கள் பக்கமே போகக்கூடாது..!' என்கிற அலறல் தேவையில்லை. எதில்தான் ஆபத்து இல்லை! செல்போன், இ-மெயில் என எல்லாவற்றிலும்கூடத்தான் ஆபத்து ஒளிந்திருக்கிறது. அவற்றையெல்லாம் ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும் வரையில் கவலையே இல்லை. அதேபோலத்தான் 'சமூக வலைதளங்கள்'. அங்கே தேவையானதை எழுதலாம்... தேர்ந்தவற்றை பரிமாறலாம். சொந்தக் கதைகளை பந்தி வைத்தால்... பிரச்னைதான்!

'நாம் கவனிக்கப்பட வேண்டும்' என்பது எல்லா மனிதர்களிடமும் இருக்கும் ஓர் எதிர்பார்ப்பு. அதிலும், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் பெண்களுக்கு சமூக வலைதளங்கள் சுலபமான வடிகால்.

கணவனே கவனிக்கவில்லை என்றால், சொந்த விஷயங்களை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழுவதில் வியப்பில்லை. ஆனால், எங்கே... எதை... யாரிடம்... என்பதுதான் முக்கியம்!

உரிமையுடன்

நமக்குள்ளே


ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு