பிரீமியம் ஸ்டோரி

அமெரிக்கப் பாடம்!

அன்பு வாசகர்களே

தானமோ, தருமமோ பாவத்துக்குப் பரிகாரம் ஆகிவிடாது... கோடி கோடியாகப் பணம் இருந்தாலும், கார்ப்பரேட் உலகத்தின் உச்சத்திலேயே இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாது! இதெல்லாமே, அமெரிக்கா நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் சமீபத்துப் பாடம்.

'இன்சைடர் டிரேடிங்’ செய்வதற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில், உலகின் முன்னணி கன்சல்டிங் நிறுவனங்களில் ஒன்றான மெக்கன்சியின் முன்னாள் தலைவர் ரஜத் குப்தாவுக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையும் 5 மில்லியன் டாலர் அபராதமும் விதித்திருக்கிறது அமெரிக்க நீதிமன்றம்.

##~##
இந்தத் தீர்ப்பு பளிச்சென்று நமக்கு உணர்த்தும் விஷயம் ஒன்று இருக்கிறது.  அரசியலோ, பண பலமோ, தனிநபரின் செல்வாக்கோ... எதுவுமே அமெரிக்காவின் சட்டங்களை முடக்கிப் போட முடிவதில்லை. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுதாரிக்க நேரம் தராமல், விறுவிறுவென்று வழக்கை நடத்தி முடித்து தீர்ப்பு கொடுப்பதன் மூலம்தான்... நீதி சரியான நேரத்தில் நிலைநாட்டப்படுகிறது.

இந்தியாவிலும்கூட நீதிமன்றங்கள் மக்களின் நல்ல நம்பிக்கைக்குப் பாத்திரமாகவே இருக்கின்றன. ஆனால், குற்றச்சாட்டில் சிக்கும் பெரிய மனிதர்கள் எப்படியெல்லாம் வழக்கை இழுத்தடிக்கிறார்கள் என்பதையும்... அரசின் சார்பாக வழக்கை நடத்தும் விசாரணை அமைப்புகள் இதற்குத் துணை போகும் அவலத்தையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

குற்றச்சாட்டில் சிக்குவது சாமானிய மனிதனாக இருந்தாலும், சரத்பவாரின் மனைவியாக இருந்தாலும் ஒரே வேகத்தில் வழக்கை நடத்தி முடித்துத் தீர்ப்பு தர வேண்டும். அதற்கான ஒத்துழைப்பு நீதிமன்றங்களுக்கு கிடைத்தாலே போதும்... பெருமளவுக்கு நீதி நம் நாட்டிலும் நிலை நாட்டப்படும்! குறிப்பாக, பொருளாதார ரீதியாக நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்தும் சுயநல சக்திகளுக்கு இதன்மூலம் பயம் ஏற்படுத்தியே ஆக வேண்டும்... அது காலத்தின் கட்டாயம்!

- ஆசிரியர்.

அன்பு வாசகர்களே
அன்பு வாசகர்களே
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு