பிரீமியம் ஸ்டோரி

அடுத்த தலைமுறை மன்னிக்காது!

அன்பு வாசகர்களே

'அரசாங்கத்துடன் தொடர்புகொள்ள வேண்டிய எந்தத் தொழிலையும் நாங்கள் செய்வதில்லை என பத்தாண்டுகளுக்கு முன்பே முடிவு செய்துவிட்டோம். இன்று வரை எங்கள் முடிவில் தீர்மானமாக இருக்கிறோம்’ என பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்திருக்கிறார் பஜாஜ் நிறுவனத்தைச் சேர்ந்த ராகுல் பஜாஜ்.

இதற்கான காரணத்தை அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும், அரசாங்கம் தொடர்புடைய எந்த காரியத்தைச் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு லஞ்சம் தந்தாக வேண்டும். இதற்கு பஜாஜ் நிறுவனத்துக்கு ஒப்புதல் இல்லை என்பதால்தான் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் கையில் இருந்தும், மின் உற்பத்தியிலோ, நிலக்கரியைத் தோண்டி எடுக்கும் தொழிலிலோ இறங்காமலே இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் ராகுல் பஜாஜ்.

##~##
ராகுலின் இந்த பேச்சு ஒரு விஷயத்தைத் தெளிவாக்குகிறது. இன்றைக்கு அரசு அலுவலகங்களில் ஏதாவது ஒரு அனுமதி பெற வேண்டும் என்றால் லஞ்சம் தராமல் எந்த காரியமும் நடக்காது. பிறந்த குழந்தையை மருத்துவமனையில் முதல் முறையாகப் பார்ப்பதில் ஆரம்பித்து, இறந்துபோன மனிதனை சுடுகாட்டில் எரிக்கிற வரை லஞ்சம் என்பது இல்லாத இடமே இல்லை. சாதாரண மனிதர்களிடமே பணம் கறக்கும் அரசியல்வாதிகள் பொன் முட்டை இடும் பிஸினஸ்மேன்களை சும்மா விட்டுவிடுவார்களா? அலைக்கற்றை அளிப்பதில் லஞ்சம், நிலக்கரி எடுப்பதில் லஞ்சம் என எல்லாவற்றுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு அனுமதி தந்து விடுகிறார்கள் அரசியல்வாதிகள். இதனால் கொள்ளை போவது நம் நாட்டின் விலை மதிப்பில்லாத சொத்துக்கள்தான்!

லஞ்சம் என்பது நம் ஆன்மாவை அரித்துவிடும் கேன்சர் கிருமி. அதை நமக்குள் வளரவிட்டால், நம் சமுதாயத்தை அழித்துவிடும் என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும். அப்படி உணர்ந்து தங்களைத் திருத்திக்கொள்ளாவிட்டால், அடுத்த தலைமுறையினர் நம்மை எந்த வகையிலும் நன்றியுணர்வோடு நினைத்துப் பார்க்க மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

- ஆசிரியர்

அன்பு வாசகர்களே
அன்பு வாசகர்களே
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு