''பெண்கள் அணியும் உடைகள்தான், பிரச்னைக்கு காரணம்...''

- இது, ஒரு சாரார் வெளியிட்டிருக்கும் கருத்து.

நமக்குள்ளே...

''பெண்கள், இரவில் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. அப்படி வருவதுதான் பிரச்னையே!''

- இது, ஆந்திராவின் காங்கிரஸ் கட்சித் தலைவரும்... போக்குவரத்து துறை அமைச்சருமான சத்யநாராயணா.

''பெண்கள் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்வதுதான், பிரச்னைக்கு தீர்வாக இருக்கும்!''

- இது, பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரின் யோசனை.

''பாலியல் வன்முறைகளைத் தடுக்க, கடுமையான சட்டங்கள் தேவை...''

- இது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கருத்து.

'வெளியில் செல்லும்போது மிளகாய்ப்பொடி கொண்டு செல்லுங்கள்’ என்றுகூட டெல்லி போலீஸ் 'அறிவுரை’ தந்ததாக செய்தி வெளியானது.

டெல்லியில், பாராமெடிக்கல் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, 13 நாட்களாக உயிருக்குப் போராடி இறந்து போயிருக் கிறார்.

மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி வெளியான நிலையில் நாடே பற்றியெரிய ஆரம்பித்தது. தமிழகத்தின் தூத்துக்குடியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த புனிதா, இதே காரணத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்.... விருத்தாசலத்தில் காதலனுடன் சென்ற பெண், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.

இப்படி 20 நிமிடங்களுக்கு ஒரு பெண், இந்தியாவில் பாலியல் வன் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவது தொடர்கதையாகவேதான் இருக்கிறது.

இதையெல்லாம் தடுத்து நிறுத்தி, சட்டத்தின் ஆட்சியை நடத்த வேண்டிய வர்களோ... பாதிக்கப்பட்டவர்கள் மீதே விஷயத்தை திசை திருப்புவதும்... கடுமையான சட்டங்கள் தேவை என்று பேசுவதும், பிரச்னையை திசை திருப்பும் வேலை என்றுதான் தோன்றுகிறது!

ஒடிசா மாநிலத்தில், ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, குற்றவாளிகளால் மிரட்டப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். இக்கொடுமைக்கு ஒரே சாட்சியாக இருந்த அவருடைய தோழி, நீதிக்காக தொடர்ந்து போராடினார். மிரட்டிப் பணிய வைப்பதில் தோற்ற குற்றவாளிகள், தோழியையும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க, அவர் பரிதாபமாக இறந்து போனார். இது சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்து, சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த கொடுமை!

மொத்தக் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் கொடுத்து, ஆரம்பம் முதலே காப்பாற்றி வந்தவர், வேறு யாருமல்ல... அந்த மாநில அமைச்சர்!

அறிவுரைகளை அள்ளி வீசுபவர்களே... இப்போது சொல்லுங்கள்...

சட்டம் திருத்தப்பட வேண்டுமா...

ஆட்சி, அதிகாரம் என்று கையில் வைத்துக் கொண்டு, குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தரும் அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், ஐ.ஏ.எஸ்-கள் ஐ.பி.எஸ்-கள் திருத்தப்பட வேண்டுமா?

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு