ரெகுலர்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

##~##

வறண்டு இருந்த வானத்தை வேத¬னையோடு வெறித்துப் பார்க்கும் நேரத்தில், பளிச்சென்று பெய்த பூ மழை போல, மறுபடியும் மேடையில் தோன்றியிருக்கிறார் பாடகி நித்யஸ்ரீ. எப்போதும் போல இமைகள் மூடி, இசை வெள்ளத்தை அவர் பாயவிட்டபோது... அரங்கத்திலிருந்த அத்தனைபேரின் கண்களிலும் பனித்துளி படர்ந்தது. இசையெனும் அமுதத்தை சுவைக்கின்ற சிலிர்ப்பு மட்டுமே அதற்கு காரணமல்ல. 'இதோ, மீண்டும் வந்துவிட்டேன்' என்று சொல்லாமல் சொல்லி, நித்யஸ்ரீ நடத்திக் காட்டியிருக்கும் புரட்சிக்காகவும்தான்!

படிப்பறிவு மிக்க, பாரம்பரியமுள்ள, கலையறிவு பெற்ற குடும்பத்திலிருந்து புறப்பட்டு வந்து, விண்முட்ட புகழ்பெற்ற போதும்... கணவனின் மனதுக்கு இசைந்த சராசரி இந்தியப் பெண்ணாகவே குடும்ப வாழ்க்கை நடத்திய நித்யஸ்ரீக்கு, இயற்கை இப்படியரு சோதனையைக் கொடுக்குமென, யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்?

நமக்குள்ளே...

கணவர் மகாதேவனின் தற்கொலை, புயலாக நித்யஸ்ரீயை கலங்கடித்த நிலையில்... 'அவருடைய இசை வாழ்வு என்னவாகும்?' என்கிற கவலைமிக்க கேள்விகள், அவரை அறிந்த அத்தனை தமிழ்க் குடும்பங்களிலுமே எழுந்தது. மகாகவி பாரதியும், பகுத்தறிவு பெரியாரும் ஒரு சேர வலியுறுத்தியபடி, குளிர்தென்றலாக கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு, நெகிழ்வோடு மேடையில் தோன்றி, அத்தனை

நமக்குள்ளே...

பேருக்கும் அழகாகப் புரிய வைத்திருக்கிறார் இந்த 'இசைப் பேரொளி'. மரபு, மதம், கலாசாரம் என்ற பெயரால், மணவாழ்க்கைக்கு அப்பாற்பட்டு ஒரு பெண்ணை முன்னேறவிடாமல் முடக்கிப் போடும் அத்தனை கட்டுப்பாடுகளையும் கலையின் பெயரால், கம்பீரமாக களைந்திருக்கிறார்.

பெண்ணுக்கு கணவன் ஓர் அடையாளம். ஆனால், அவளுக்கென்றும் தனி அடையாளம் கட்டாயம் உண்டு என்பதை வலியுறுத்தியிருக்கிறது இந்த இரண்டாவது அரங்கேற்றம். 'ரசிகப் பெருமக்களின் கைதட்டல் ஒலியை, எனக்கு அவர்கள் தரும் ஆசீர்வாதமாகவே எடுத்துக் கொண்டேன். எனக்கு விதிக்கப்பட்ட துயரையெல்லாம், இப்போது இந்த மேடை துடைத்துவிட்டது' என்று அவர் கூறியிருப்பதில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன.

சமூகம் என்கிற பேரால் வெளிப்படும் பொறுப்பற்ற விமர்சனங்களுக்கு, காது கொடுக்காமல் தங்களை தாங்களாகவே தைரியத்தோடு வெளிப்படுத்தும் அத்தனை பெண்களுக்குமே ஆரம்பத்தில் சிற்சில தடைகள் இருக்கலாம்... ஆனால், அதைத் தொடர்வது ஆரவாரமான கரகோஷமாகத்தான் இருக்கும்.

சாஸ்திரிய சங்கீத அரங்கத்திலிருந்தே இப்படியரு கரவொலி எழுந்திருப்பதை... கவனமாக பதிவு செய்துகொள்ள வேண்டும் அத்தனை பெண்களும்!

உரிமையுடன்

நமக்குள்ளே...


ஆசிரியர்