ஹலோ வாசகர்களே..!
##~## |
மத்திய பட்ஜெட்டை எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்கிற நேரமிது. இந்த பட்ஜெட்டில் பலரும் பல விஷயங்களை எதிர்பார்க்க, பொருளாதார வளர்ச்சிக்கு மூன்று முக்கியமான விஷயங்களை மத்திய நிதி அமைச்சர் செய்தே ஆகவேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
முதலாவது, வேகமாகக் குறைந்துவரும் தனிமனித சேமிப்பை உயர்த்தவேண்டும். சேமிப்புக் குறையக் காரணம், கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு. விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு, தனி மனிதர்களுக்கான வரியை இன்னும் கொஞ்சம் குறைத்தால், சேமிப்பு நிச்சயம் உயரும்.
இரண்டாவதாக, தொழில் துறையின் வளர்ச்சியானது கடந்த சில ஆண்டுகளாக சுணங்கிப்போய்க் கிடக்கிறது. தொழில் துறை மீண்டும் சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்கான கடனுதவி, கட்டமைப்பு வசதி உள்பட அனைத்து சௌகரியங்களையும் இந்த பட்ஜெட் மூலம் நிதி அமைச்சர் செய்துதர வேண்டும்.
மூன்றாவதாக, நாளுக்குநாள் அசுர வேகத்தில் அழிந்து வருகிறது விவசாயம். இன்னும் சில ஆண்டுகள் நாம் இதை கண்டுகொள்ளாமல் விட்டால், உணவுக்காக உலக நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு வந்துவிடுவோம்.
இந்த விஷயங்களையெல்லாம் செய்ய மத்திய அரசுக்கு நிறைய நிதி நிச்சயம் தேவை. இதற்கு மத்திய அரசு மக்களுக்கு இலவசங்களை அள்ளித் தரும் கலாச்சாரத்தை உடனடியாக ஒழித்துக்கட்டவேண்டும். அரசின் நலத் திட்டங்கள் தகுதியானவர்களுக்கு சென்றடைவதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும்.
அரசு செலவுகள் அனைத்தும் சரியாகச் செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணித்து, தேவை இல்லாதச் செலவுகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, வரி ஏய்ப்பு செய்ய யாரையும் அனுமதிக்கக்கூடாது. சகல தரப்பினரிடமிருந்தும் வரியை நூறு சதவிகிதம் வசூலிக்கவேண்டும்.
பொருளாதார மந்தநிலை ஒருபக்கம், விரைந்துவரும் பொதுத் தேர்தல் இன்னொரு பக்கம் என மத்திய நிதி அமைச்சருக்கு பல நெருக்கடிகள் இருக்கும் இச்சமயத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வது சவாலான விஷயமே! இந்த சவாலில் ஜெயிக்கும் திறமை நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு இருந்தாலும், அதைச் செய்ய சோனியா காந்தி அனுமதிப்பாரா?
- ஆசிரியர்.
