ஆசிரியர் பக்கம்
நடப்பு
Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

 இன்று சைப்ரஸ்..! நாளை இந்தியா..?

##~##

டிசம்பர் 2012 காலாண்டுக்கான நடப்புக் கணக்கு பற்றாக்குறை நம் ஜி.டி.பி.-ல் 6.7 சதவிகிதம் என்று வந்த புள்ளிவிவரம், நம் பொருளாதாரம் 1991-ம் ஆண்டின் நிலைமைக்குச் சென்றுவிட்டதோ என்னும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நம் கையிலிருக்கும் அந்நிய செலாவணியைவிட அயல்நாட்டுக் கடன் மிக வேகமாக வளர்ந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு வரும் பணம், நம் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பணத்தைவிட அதிகமாக இருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் பற்றாக்குறை ஏற்பட்டு, நமது பணத்தின் மதிப்பு குறையும் என்பது பொருளாதாரத்தின் அடிப்படை. இந்தப் பற்றாக்குறை சமாளிக்கக்கூடிய 2.5 சதவிகிதத்தைவிட அதிகமாக இருப்பதுதான் இன்றைக்கு நம் பெரும் பிரச்னை.  

நம் வீடுகளில் வரவைவிட செலவு அதிகமாக இருக்கும்போது, செலவுகளைக் குறைப்பதன் மூலம் பற்றாக்குறையை சரிகட்டுகிறோம். ஆனால், பொருளாதார நிபுணர்கள் புடைசூழ நடக்கும் இந்த அரசாங்கமோ, பற்றாக்குறையைக் குறைக்க எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை! பற்றாக்குறை குறைந்துவிடும் என்று அவர்கள் சொல்லச் சொல்ல, அது எகிறியபடியே இருக்கிறது.

நடப்புக் கணக்கு பற்றாக்குறையைத் தீர்க்க  அரசாங்கம் மூன்று விஷயங்களைச் செய்தே ஆகவேண்டும். ஒன்று ஆண்டுக்காண்டு அதிகரித்துவரும் இறக்குமதியைக் குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க கொள்கைகளை வகுக்கவேண்டும். இரண்டு, கணக்கில் வராமல் குவிந்துகிடக்கும் கறுப்புப் பணம் தங்கமாக மாறுவதைத் தடுக்க, தங்க இறக்குமதியைக் குறைக்கவேண்டும். மூன்று, கணக்குவழக்கில்லாமல் பெட்ரோல், டீசல் பயன்படுத்தப்படுவதைக் குறைப்பதன் மூலம் கச்சா எண்ணெய்யின் இறக்குமதியைப் பெருமளவில் குறைக்கவேண்டும். அதைவிடுத்து அந்நிய முதலீடுகளை ஊக்குவிப்பது போன்ற குறுகியகால தீர்வுகளால் எந்தப் பயனும் ஏற்படாது. அந்நிய முதலீடுகள் நொடிப்பொழுதில் திரும்பப் போய்விடும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.  

அபாயத்தின் விளிம்பில் இருப்பதை இந்த அரசு உணர்ந்து, இனியும் தாமதிக்காமல் சீர்திருத்தங்களைக் கொண்டுவரவில்லையெனில் இந்தியா இன்னொரு சைப்ரஸ் ஆவது உறுதி!

ஹலோ வாசகர்களே..!

- ஆசிரியர்.