Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:
##~##

ன்னதான் சௌகரியங்கள் இருந்தாலும், கொஞ்சம் பாவம்தான் இந்த காலத்துப் பசங்கள்..! கோடை விடுமுறை காலம் வந்தால்கூட ஓய்வும், நிஜமான சந்தோஷமும் எத்தனை பேருக்குக் கிடைக்கிறது? 'சம்மர் கேம்ப்' தொடங்கி, அடுத்த வருடத்துப் பாடத்துக்கு இப்பவே டியூஷன் என்பது வரையில், விடுமுறை காலம்கூட அவர்களுக்கு 'படிக்கிற' காலமாகவே கழிகிறது. போட்டி உலகம் வாட்டி எடுக்கும் இந்தக் காலத்துக்கும்... எந்தக் கவலையுமே இல்லாமல் சிட்டுக்குருவிபோல் சிறகடித்த அந்தக் காலத்துக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்!

பத்து - இருபது வருடத்துக்கு முன்பெல்லாம் சம்மர் லீவு வந்தால், எத்தனை பேர் ஊட்டி, கொடைக்கானல் போய்க் கொண்டிருந்தோம்? பெரும்பாலும் நம்ம பாட்டி, மாமா, சித்தப்பா வீடுகளுக்குப் போய் மாதக் கணக்கில் ஜாலியாக இருந்த நினைவுகள் எவ்வளவு சுகமானவை! வெவ்வேறு ஊர்களில் இருக்கும் உறவுக்கார குழந்தைகள் எல்லாம் ஒன்றுகூடிவிட... பாட்டி, அத்தை கையால் பருப்பு சோறும், தயிர் சாதமும் உருட்டி உருட்டிப் போட... கேலியும் கூத்துமாக அத்தனை அமர்க்களம் நிறைந்த நேரம் அல்லவா அது!

நமக்குள்ளே...

ஜயன்ட் வீலும், வீடியோ கேம்ஸும் இப்போதுதானே... அன்றைக்கு பல்லாங்குழியும், ஏழாம் கல்லும், பாண்டி ஆட்டமும் தந்த சிலிர்ப்புக்கு இதெல்லாம் ஈடாகுமா? நம்மில் துணிச்சலான தோழிகள், கிராமத்துத் தரைக் கிணறுகளில் குதித்து நீச்சல் அடித்த அனுபவம்கூட இருக்குமே..!

மனங்கொண்ட மட்டும் மாங்காய் அடித்து பல் கூசக் கூச கடித்து ருசித்தது... விடிய விடிய கோயில் திருவிழாவில் தெருக்கூத்து பார்த்தது... சைக்கிள் ஓட்டி முட்டியைப் பெயர்த்துக்கொண்டு மணலை சலித்து மருந்தாகப் போட்டது... வீட்டுக்கு வீடு 'கான்ட்ரிபியூஷன்' கொண்டு வந்து கூட்டாஞ்சோறு பொங்கித் தின்றது... வண்டி கட்டிக்கொண்டு போய் டென்ட் தியேட்டரில் சினிமா ரசித்தது... சிக்கனமான செலவில், கணக்கிட முடியாத குஷி அல்லவா அது!

லீவு முடிந்து ஊர் திரும்புகிற நாள் வரும்போது, எத்தனை துக்கம் பொத்துக்கொண்டு வரும்..! பள்ளி தொடங்கிய பிறகும், பல நாட்கள் வரை நம் மனதுக்குள் அந்த மகிழ்ச்சித் தருணங்களின் நினைவுகள் அலையடித்துக் கொண்டிருக்குமே!

அன்றைய குழந்தைகளே... இன்றைய அம்மாக்களே, அக்காக்களே!

வாழ்க்கை பற்றி, உறவுகள் பற்றி 'அந்த நாள் சம்மர்' எளிமையாக கற்றுத் தந்த பாடங்களை, நம் வீட்டுக் குழந்தைகளுக்கு எந்த பல்கலைக்கழகம் இப்போது சொல்லிக் கொடுக்கும்? நாம்தானே அதைச் செய்தாக வேண்டும்!

உரிமையுடன்

நமக்குள்ளே...
நமக்குள்ளே...

ஆசிரியர்