பிரீமியம் ஸ்டோரி
##~##

'நூற்றுக்கு நூறு அல்லது குறைந்தபட்சம் 95 மதிப்பெண்களாவது எடுக்க வேண்டும். அதற்குக் குறைவாக எடுத்தால்... ம்ஹூம், எதற்கும் பிரயோஜனம் இல்லை...'

- இன்றைக்கு வீட்டுக்கு வீடு இதுதானே ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது!

''கல்வி என்பது, சிந்தனைத் திறனைக் கூர்மைப்படுத்தும் பயிற்சியாக, திறமையை வெளிக்கொணரும் உந்துசக்தியாக இருக்க வேண்டும்! மனப்பாடம் மூலமாக எழுத வைக்கப்படும் தேர்வு மதிப்பெண்களை வைத்து மட்டுமே எடைபோடும் கல்வி முறை, ஏற்கக் கூடியது அல்ல'' என்று கல்வியாளர்கள் பலரும் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

ஆனால், நிஜத்தில் என்ன நடக்கிறது?

நமக்குள்ளே...

கறிக்கோழிகளை வளர்ப்பதுபோல வருடம் முழுவதும் ஓரிடத்தில் அடைத்து வைத்து.... பாடப் புத்தகங்களை தவிர, வேறு எதையும் கண்களில் காட்டாமல்... யூனிட் டெஸ்ட், மன்த்லி டெஸ்ட், ரிவிஷன் டெஸ்ட் என்று இருநூறு, முந்நூறு டெஸ்ட்டுகளை எழுத வைத்து... குழந்தைகளை இயந்திரங்களாக நடமாடவிடும் பள்ளிகள்தானே அதிகரித்துக் கொண்டிருக்கின்றன! இத்தகைய 'மார்க் ரேஸ்', மன அழுத்தத்துக்கு ஆளாக்குகிறது என்பதை நிரூபிக்க, வீடுகள்தோறும் உதாரணங்கள் உண்டுதானே!

என்றாலும், ''இதையெல்லாம் பேசிப் பேசி என்ன பிரயோஜனம்? ஊரில் எல்லோருக்கும் உள்ளதுதானே நமக்கும்!’' என்று சமாதானம் சொன்னபடி, இந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடவும்.... முதலாவதாக வரவும்... இளங்குருத்துகளை துரத்துவதைத்தானே தொடர வேண்டியிருக்கிறது.

சரி, கல்வி முறை மாறும்போது மாறட்டும். ஆனால், 'மார்க் மட்டுமேதான் வாழ்க்கை; இன்ஜினீயரிங் மட்டும்தான் எதிர்காலம்!' என்பதுபோல நாம் நம்பும் மாயபிம்பங்களை, நம்பச் சொல்லி குழந்தைகளையும் வற்புறுத்தாமல்... ஆரோக்கியமாக சிந்திக்க, கேள்விகள் எழுப்ப, அறிவின் விளிம்புகளை அகலமாக்க உரிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்கலாம்தானே!

சமீபத்திய ப்ளஸ் டூ தேர்வில், ஆயிரத்து நூறுக்கு மேல் மதிப்பெண்களை அள்ளியிருக்கும் திருச்சி - பவித்ரா, பெரம்பலூர் - கலைமணி, கன்னிவாடி - ரஞ்சிதா, கும்பகோணம் - கவிதா, தேனி - பிரியங்கா... ஆகியோரை இந்த இதழ் 10-ம் பக்கத்தில் நீங்கள் சந்தித்திருப்பீர்களே... அந்த உண்மையை நீங்களும் உணர்ந்திருப்பீர்களே!

ஏழ்மைச் சூழலிலும் மதிப்பெண்களை அள்ளியிருக்கும் இவர்கள் மட்டுமல்ல... பெற்றோர்களும் பெருமிதப்பட வைக்கிறார்கள். பின்னே... மார்க் எடுப்பதற்கான பள்ளிப் பாடத்தோடு... வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு சமாளிப்பது எப்படி என்பதை, செய்முறை பாடமாக அல்லவோ வீட்டில் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு