பிரீமியம் ஸ்டோரி
##~##

'தங்கச் சங்கிலியை அறுக்க முயன்றபோது, கழுத்து அறுபட்டு ஆசிரியை பலி'

- இந்தச் செய்தியைப் படித்ததுமே... அன்றைய தின தூக்கம் தொலைத்த உங்களைப் போன்ற பலரில், நானும் உண்டு.

மதுரையைச் சேர்ந்த 52 வயது கணித ஆசிரியை ஜெயராணி, வழக்கம்போல தன் மொபெட்டில் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்த இரண்டு கொடூரர்கள், தங்கச் சங்கிலியைப் பறிக்க முயல... ஜெயராணி போராட... தடுமாறி அவர் கீழே விழுந்திருக்கிறார். இதைப் பார்த்து தப்பிச் சென்றுள்ளனர் அந்தக் கொடூரர்கள். சங்கிலியில் இருந்த கொக்கி கழுத்தில் குத்திக்கொண்டதால், அது பறிபோகவில்லை... ஆனால், அளவுக்கு அதிகமாக ரத்தம் வெளியேறியதால், அந்த இடத்திலேயே உயிர் பறிபோய்விட்டது!

நமக்குள்ளே...

இதைப் பற்றித்தான் அன்று நீண்ட நேரம் எங்கள் வீட்டில் பேச்சே..!

சங்கிலி பறிப்பு பற்றிய செய்திகள் தொடர்கதையாகத்தான் உள்ளன. 'இன்றைய சங்கிலி பறிப்பு' என்று நாளேடுகளில் ஒரு பக்கத்துக்கு எழுதும் அளவுக்கு, மாநிலம் முழுக்கவே தினமும் நடக்கின்றன. எதிர்போராட்டம் நடத்தும்போது கழுத்து அறுபட்டு, காயம்பட்டு என ரத்தம் சிந்தும் சோக சம்பவங்களும் பதிவாகின்றன.

ஆயிரம் சங்கிலிகள் பறிபோயிருந்தால்... எப்போதாவது ஒன்றிரண்டு பேரை பெயருக்குக் கைது செய்கின்றனர். 'சங்கிலி திருடர்கள் இனி வாலாட்ட முடியாது' என்று எச்சரிக்கை செய்திகளை வெளியிடுகின்றனர். ஆனால், முந்தைய நாள் இப்படியரு சம்பவம் நடந்த அதே இடத்தில், மறுநாளே அதேபோன்றதொரு கொடுமை ஆரம்பித்துவிடுகிறது. 'உள்ளூர் போலீஸாருக்கும்... சங்கிலி திருடர்களுக்கும் பங்கு உண்டு. திட்டமிட்டே இத்தகைய செயல்கள் எல்லாம் நடக்கின்றன' என்று வரும் செய்திகள் உண்மையோ... என்று நம்பும் அளவுக்கு இத்தகைய சம்பவங்கள் தொடர்கின்றன!

'எல்லோரும் துப்பாக்கி வைத்துக் கொண்டு நடமாடக்கூடிய சூழ்நிலை தமிழகத்தில் வந்து கொண்டிருக்கிறது' என்று சில அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் சாத்தியமா தோழிகளே?!

மதுரை தோழி ஜெயராணிக்கு நேர்ந்த கொடூரம்... இனி ஒரு பெண்ணுக்குக்கூட நேரக்கூடாது என்றால்... அரசாங்கத்திடமும் போலீஸிடமும் பாதுகாப்பு கேட்டுக் கொண்டிருப்பதில் பலன் இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? இதுபோன்ற சம்பவங்கள் நமக்குச் சொல்லும் பாடமே... 'நீ எச்சரிக்கையாக இரு' என்பதைத்தான். வேறென்ன சொல்ல?

உரிமையுடன் 

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு