பிரீமியம் ஸ்டோரி
ஹலோ வாசகர்களே..!

மத்திய ரிசர்வ் வங்கியின் 23-வது கவர்னராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் தற்போது பிரதமரின் பொருளாதார ஆலோசகராக இருக்கும் ரகுராம் ராஜன். மிகக் குறைந்த வயதில் நமது ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியை அடைந்திருக்கும் இவர் ஒரு தமிழர் என்பதில் நாமெல்லாம் நிஜமாகவே பெருமைகொள்ளலாம்.

மிகவும் சிக்கலான பொருளாதாரச் சூழலில் இந்தியாவும் ஏனைய உலக நாடுகளும் இருக்கும் இந்தச் சமயத்தில்தான் ரகுராம் ராஜனுக்கு இந்த முக்கியமான பதவி கிடைத்திருக்கிறது. பொருளாதார வீழ்ச்சியினால் நம் நாடு அதிக பாதிப்புக்கு உள்ளாகாதபடி தற்போதைய கவர்னர் சுப்பாராவ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து பாதுகாத்தார் என்றாலும், அந்நடவடிக்கைகளால் வளர்ச்சி தடைபட்டுள்ளது என்னும் விமர்சனத்தையும் மறுக்க இயலாது.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியை ஏற்றவுடன் ரகுராம் ராஜன் உடனடியாக செய்யவேண்டிய வேலைகள் பல இருக்கின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான நமது ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்கு அவர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். குறைந்துகொண்டே வரும் நமது   அந்நிய செலாவணியின் கையிருப்பை மீண்டும் உயர்த்துவது அவருக்கு இருக்கும் இரண்டாவது சவாலாகும்.

நுகர்வோர் பணவீக்கம் தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. மத்திய ரிசர்வ் வங்கி பாண்டுகளை வெளியிடுவதன் மூலம் எவ்வளவோ பணத்தை எடுத்தபிறகும், பணப்புழக்கம் குறைந்த மாதிரி தெரியவில்லை. பணவீக்கத்தை ஒரு கட்டுக்குள் கொண்டுவரும்  கடமை அவருக்கு நிச்சயம் உண்டு.

கூடிய விரைவில் புதிய வங்கிகளைத் தொடங்குவதற்கான அனுமதியை தரமான நிறுவனங்களுக்குத் தரவேண்டிய வேலையையும் ரகுராம் ராஜன் பொறுப்போடு, சரியாக செய்துமுடிக்க வேண்டும். புதிய வங்கிக்கான அனுமதி தவறான நிறுவனங்களுக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருக்கவேண்டும்.

நிதி அமைச்சகத்துடன் கைகோத்து, பொருளாதாரம் மீண்டும் 8 சதவிகித வளர்ச்சி அடைய ரகுராம் ராஜன் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்யவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு!

- ஆசிரியர்.

ஹலோ வாசகர்களே..!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு