பிரீமியம் ஸ்டோரி
##~##

நாட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் பண்டிகைகளில் மிகமுக்கியமானது நவராத்திரி! ஒவ்வொரு நாளும் ஒரு பெண்ணை (தெய்வத்தை) முன்னிலைப்படுத்தி கோலாகலமாக பெண்கள் கொண்டாடும் பண்டிகை.

அந்தக் காலத்திலேயே பெண்களின் உழைப்பிலிருக்கும் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டுதான்... 'உழைப்பாளிகளின் திருநாள்' என்று போற்றப்படும் 'ஆயுத பூஜை', அதையட்டிய 'நவராத்திரி' என பண்டிகைகளில் பெண்களை போற்ற ஆரம்பித்துள்ளனர். ஆனால், இப்படி பண்டிகைகளில் கிடைக்கும் முக்கியத்துவம், இன்றைக்கு நிஜத்தில் பெண்களுக்கு இருக்கிறதா... என்று யோசித்தால், வருத்தமாகத்தான் இருக்கிறது.

கோலம் போடுவதற்கு புள்ளிகள் எந்த அளவுக்கு முக்கியமோ... அதே அளவு நாட்டின் நலத்திட்டங்கள் வகுக்கப்படுவதற்கு புள்ளிவிவரங்கள் முக்கியம். ஆனால், இதில்கூட பெண்களின் முக்கியத்துவம் இரண்டாம்பட்சமாகவே காட்டப்படுகிறது. சமீபத்தில் உழைப்பாளர்கள் பற்றி வெளியான மத்திய அரசின் புள்ளிவிவரம், ஆண்களின் எண்ணிக்கை 23 கோடி... பெண் உழைப்பாளர்கள் 10 கோடி என்கிறது.

நமக்குள்ளே...

இதைப் பார்க்கும்போது 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் வெள்ளைக்கார துரையைப் பார்த்து, 'ம்... எண்ணிக்கை தெரியாத குற்றம்' என்று சிவாஜி கணேசன் சிரிப்பாரே... அப்படித்தான் சிரிக்கத் தோன்றுகிறது!

கிராமத்திலிருந்து ஆரம்பிப்போமா... ஏர் ஓட்டுவது, அண்டை போடுவது, வாய்க்கால் வெட்டுவது, டிராக்டர் ஓட்டுவது, நெல் மூட்டைகளை வண்டிகளில் ஏற்றுவது... ஆண்களின் வேலை. அதேசமயம், நாற்று நடுவது, களை எடுப்பது, நெல்லை தூற்றி காய வைப்பது... பெண்களின் வேலை. இதோடு முடிந்ததா... வேலை முடிந்து வீட்டுக்கு சென்றால் துணி துவைப்பது துவங்கி, வீட்டைச் சுத்தம் செய்வது, சமையல் செய்வது... அங்கேயும் பெண்கள்தானே பம்பரமாகிறார்கள்.

நகர்புறங்களில் டெலிபோன் பூத், கார்மென்ட் ஃபேக்டரி, தீப்பெட்டி ஓட்டும் வேலை... ஏன் கார் ஃபேக்டரியில்கூட சரிக்குசரி பெண்கள்தான். மருத்துவத்துறை, வங்கித்துறை, ஐ.டி, பி.பி.ஓ என்று பல துறைகளிலும் இப்படித்தான். இங்கெல்லாமும் வேலை முடித்து வீடு திரும்பினால்... வீட்டு வேலை, குழந்தைகளின் படிப்பு, ஆரோக்கியம் என்று சகலத் தையும் பெண்கள்தானே அதிகபட்சமாக பார்க்க வேண்டியிருக்கிறது! 'ஹோம் மேக்கர்' என் கிற பெயரில் வீட்டிலேயே இருக்கும் பெண்களின் உழைப்பும் குறைவாகவா இருக்கிறது?!

இதெல்லாம், புள்ளிவிவரங்களில் ஏற்றப்படுவதில்லையே ஏன்?

'உழைப்பாளர்’ என்ற சொல்லுக்கு என்ன 'டெஃபினிஷன்’ வைத்திருக்கிறார்களோ... அதை மாத்தி யோசிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். புள்ளிவிவரங்கள் நம் மேன்மையை ஒப்புக்கொள்ளா விட்டாலும், தன்னலம் கருதாமல் நாள் முழுவதும் ஓடியாடி பாடுபடும் நாம், நம்மைப் பற்றி பெருமிதம் கொள்வோம். அதை ஊர் உலகுக்கும் உணர்த்துவோம்.

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு