பிரீமியம் ஸ்டோரி

என்ன எதிர்பார்க்கிறது அரசு?

அன்பு வாசகர்களே

டந்த சில நாட்களுக்கு முன்புதான் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் என்ற அளவுக்கு உயர்த்தியது மத்திய அரசு. அந்த நெருக்கடியில் இருந்தே மீண்டு வர முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்க, அடுத்த உயர்வுக்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறார் சி.ரங்கராஜன். இவர், பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் குழுவின் தலைவர். பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலையை உயர்த்தும் பட்சத்தில், இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை மிகவும் குறையும் வாய்ப்பிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.

இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை கொஞ்சம் அதிகம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். அதற்காக எரிபொருட்களின் விலையை உயர்த்துவது ஒன்றுதான் பற்றாக்குறையை குறைப்பதற்கான வழியா?

##~##
நிதிப் பற்றாக்குறையை குறைக்க முதலில் வருமானத்தை அதிகரிக்க வேண்டும், இரண்டாவது செலவுகளைக் குறைக்க வேண்டும். இவற்றைச் செய்யாமல் எளிதாக இருக்கிறது என்று எரிபொருள் விலையை உயர்த்துவது எந்த வகையில் நியாயம்?  ரங்கராஜன் விரும்புவதுபோல எரிபொருட்களின் விலையை உயர்த்தினால் ஒருபக்கம் அரசு வருமானம் அதிகரிக்கும், மறுபக்கம் என்ன நடக்கும்? விலைவாசி அதிகரித்து பணவீக்கம் எகிறும். அதன் தொடர்ச்சியாக வட்டிவிகிதங்கள் உயர்ந்து, இந்திய பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்படும்.

அரசு பொறுப்பில் உள்ளவர்கள் செலவினங்களைக் குறைத்து... ஆக்கப்பூர்வமான வழிகளில் வருமானத்தை உயர்த்தி... அதன் மூலம் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கச் செய்வதே ஒரு நல்ல அரசாங்கத்தின் பொறுப்பு. அதற்கான வழிகளைத் தேடாமல் நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களை கசக்கிப்பிழிந்து அவர்கள் தயவில் வண்டியை ஓட்டுவது திறமையான அரசுக்கு அழகாகாது; அறிவுடைமையும் ஆகாது.

-ஆசிரியர்

அன்பு வாசகர்களே
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு