நாணயம் என் நண்பன்! |

|
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி ண்டுக்கல் ஏ.எம்.சி ரோட்டில் காலை நேரப் பரபரப்பில் இருந்தது சங்கீத் புக் ஸ்டால். ‘அண்ணே... காலை பேப்பர் ஒண்ணு கொடுங்க...’ ‘ஒரு ஆனந்த விகடன் கொடுங்க...’ ‘நல்ல கூலிங்கா வாட்டர் பாட்டில் கொடுங்க...’ என்று பலவிதமான குரல்கள் ஒலிக்க... அனைவருக்கும் பரபரவென கேட்டவைகளை எடுத்துக்கொடுத்து பணத்தை வாங்கி கல்லாவில் போட்டுக் கொண்டிருந்தார், கடையின் உரிமையாளர் சுப்பிரமணி. “பத்து வருஷமா நானும் என் அண்ணன் ரங்கசாமியும் சேர்ந்துதான், இந்தப் புத்தகக்கடையை நடத்திக்கிட்டு இருக்கோம். நாணயம் விகடன் வந்தவுடனே ரெண்டு பேரும் அட்டை டூ அட்டை படிச்சுருவோம். அதிலே வர்ற கூடுதல் வருமான டிப்ஸ்களைப் பார்த்து, எங்க கடையிலும் அதைச் செயல்படுத்த ஆரம்பிச்சோம். வெறும் புத்தகக் கடையாக இருந்த இடத்தை, மினி டிபார்ட்மென்ட் ஸ்டோரா மாத்தியிருக்கோம்னா அதுக்குக் காரணம் நாணயம் விகடன்தான். இப்பக் கொஞ்சம் மாறுதல்கள் செஞ்சதிலே, அதிக வருமானம் பார்த்துக்கிட்டிருக்கோம். எங்க கடை, பஸ்ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கு. அதனால சோப், பவுடர், ஹேர் டை, பிஸ்கட், பேனா, வாட்டர் பாட்டில், குளிர் பானங்கள், ஸ்டேஷனரி அயிட்டம்னு பல பொருட்களை வாங்கி விற்க ஆரம்பிச்சோம். ஒருமுறை நாணயம் விகடனில், ‘பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களுக்கு அருகில் உள்ள கடைகளில் பேஸ்ட், பிரஷ் விற்கலாம்னு’ டிப்ஸ் கொடுத்திருந்தாங்க. அதுதான் எங்களைத் தூண்டிவிட்டது. அடுத்து, நம்ம கடையை ஒட்டி என்னென்ன மாதிரி ஆட்கள் இருக்காங்க... அவங்க தேவை என்னனு கவனிக்க ஆரம்பிச்சோம். பக்கத்திலேயே வீட்டு வசதி வாரியக் குடியிருப்பும் இருக்கிறதால், கூடுதல் கஸ்டமர்கள் கிடைச்சிருக்காங்க. அவர்களிடமும் எங்கள் கடை பேப்பர், புத்தகங்களை விற்பனை செய்ய முடியுது. நாணயம் விகடன் சொன்ன அடுத்த யோசனையாக, ஒரு காயின் போனை வாங்கி மாட்டிட்டோம். எந்தச் சிரமமும் இல்லாமல், அது தனி வருமானத்தைக் கொடுத்துக்கிட்டிருக்கு. இதெல்லாம், தொழிலில் நாணயம் விகடன் கொடுத்த லாபம் என்றால், தனிப்பட்ட முறையில் சேமிப்பு மீதும், முதலீடு மீதும் தெளிவான கவனம் வருவதற்கும் உதவியாக இருக்குது. சுருக்கமாச் சொன்னா, நம்மை மேலேற்றிவிடும் சில நெருக்கமான நண்பர்களில் ஒருவராக, சீமானாக்கும் ஏணியாக இருக்கிறது நாணயம் விகடன்” என்றார் சுப்பிரமணி, பெருமை பொங்க! |