பிரீமியம் ஸ்டோரி
ஆசிரியர் கடிதம்
நாணயம் என் நண்பன்!
 


நாணயம், என் நண்பன்!

நாணயம் என் நண்பன்!

‘‘ஒ ரு சின்ன பெட்டிக்கடை, அதுல நாலு புத்தகம், ரெண்டு வாழைத்தார், ஒரு கடலைமிட்டாய் டப்பா’ என்று ரொம்ப சாதாரணமாக வியாபாரம் செய்துகொண்டிருந்தவன் நான். எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு கதவு திறக்கும்னு சொல்வாங்களே, அதே மாதிரிதான் என்னோட வாழ்க்கையிலும் ஒரு கதவு திறந்தது. நாணயம் விகடன் புண்ணியத்திலே’’ என்று நெகிழ்ந்து சொல்லும் பாஸ்கர், திருச்சி தில்லைநகர் ஐந்தாவது கிராஸில் ‘எம்.ஆர்.சாமி ஸ்டோர்’ என்ற பெயரில் கடை வைத்திருக்கிறார்.

‘‘பெட்டிக்கடை வியாபாரத்தை எப்படிப் பெருக்கலாம் என்ற சிந்தனை இல்லாமல் கடைக்கு வருவேன். இருக்கிற பொருளை வியாபாரம் பண்ணிட்டுப் போயிட்டே இருப்பேன். என் கடையில் புத்தகங்களும் விற்பதால், எந்தப் புத்தகமாக இருந்தாலும் கடைக்கு வந்ததும் ஒருதடவை புரட்டிப் பார்த்திடுவேன்.

அப்படித்தான் நாணயம் விகடன் முதல் இதழையும் பார்த்தேன். புரட்டப் புரட்ட எனக்குள் பளீரென்று உள்ளுக்குள் ஒரு பல்ப் எரிந்தது. எத்தனை வாய்ப்புக்களை வைத்துக்கொண்டு சும்மா இருந்துவிட்டோமே என்று குற்ற உணர்ச்சியே வந்துவிட்டது. புத்தகத்தைக் கையோடு வீட்டுக்கு எடுத்துச்சென்று முழுக்கப் படித்து முடித்தேன். மளிகைக்கடைகள் பற்றிய ஒரு கட்டுரையில் கடையில் என்னவெல்லாம் வைத்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கட்டம் கட்டி விளக்கி இருந்தார்கள். அதில் எதை எல்லாம் என் கடைக்கு எடுத்துக் கையாளமுடியும் என்று பார்த்தேன். அவை தவிர, ‘என் கடை இருக்கும் ஏரியாவில் என்னவெல்லாம் புதிதாக விற்கமுடியும்’ என்று யோசித்தேன். இப்போது என் கடை பிஸியானதாக மாறிவிட்டது.

சீசனுக்கு ஏற்ற மாதிரி லவ்வர்ஸ் ஸ்டே, தமிழ்ப்புத்தாண்டு போன்ற விஷேங்களுக்கான வாழ்த்து அட்டைகளை வாங்கி விற்க ஆரம்பிச்சிருக்கேன். நல்ல வேகமா விற்பனையாகிட்டு இருக்கும் முன்னணி பதிப்பக புத்தகங்களுக்குனு தனி ஸ்டாண்ட் போட்டு வெச்சிருக்கேன். கேம்ஸ் சி.டி-க்கள், எம்.பி 3 பாடல் சி.டி-க்கள் போன்றவற்றையும் வாங்கி விற்கிறேன். இப்படியெல்லாம் செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று வழிகாட்டியது நாணயம் விகடன்தான்.

‘‘என் உறவுக்காரப் பையன் ஒருத்தன் படிச்சுட்டு வேலை இல்லாமல் சுத்திக்கிட்டிருந்தான். நாணயம் விகடன்ல ‘தொழில் தொடங்கலாம் வாங்க’ பகுதியில் வந்த ஃபாஸ்ட்புட் கடை தொழிலைப் பற்றி படிச்சுட்டு அதுக்கான ஏற்பாடுகளில் இறங்கி பணம் புரட்டிக்கிட்டு இருக்கிறான்’’ என்கிற பாஸ்கர்,

‘‘தனி மனிதர்களைச் சிந்திக்க வெச்சிருக்கு நாணயம் விகடன். ஒரேயரு நல்ல பாதையைக் காட்டுறதை விட, ஓராயிரம் நல்ல பாதைகளுக்கான வழியைச் சொல்றதுதான் நல்லது. அந்த வழியைச் சொல்ற நாணயம் விகடன் எப்பவும் என் நண்பன்தான்..!’’ என்கிறார் நெகிழ்ச்சியாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு