Published:Updated:

வணக்கம்

வணக்கம்

வணக்கம்

வணக்கம்

Published:Updated:
 
வணக்கம்
 

ட்டமன்றத் தேர்தலுக்கு முன்...

விகடனின் சகோதரப் பத்திரிகையான ஜூனியர் விகடன் வெளியிட்ட 'மெகா கணிப்பு'க்கு- அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விசித்திரமானதொரு உள்நோக்கம் கற்பிக்கும் முயற்சி நடந்தது. ‘விகடன் குழுமப் பத்திரிகை, மாறன் குடும்பத்துக்குக் கைமாறி விட்டது' என்றும் 'விலை போய்விட்டது' என்றும் நா கூசாமல் ஒரு புரளி கிளப்பிவிடப்பட்டது. அவர்கள் ஆதரவுத் தொலைக்காட்சியும், அதிகாரபூர்வ நாளேடும் அந்தப் புரளியையே தொடர்ந்து பல்லவி பாடின.

ஆனால், அதன் பின்னால் இருந்த குயுக்தியைத் தெளிவாகப் புரிந்துகொண்ட வாசகர்கள், அதைப் புறங்கையால் புறக்கணித்துவிட்டார்கள். ஜூ.வி-யின் மெகா கணிப்பு, மக்களின் மனங்களையே பிரதிபலித்தது என்பதைத் தேர்தல் முடிவு உறுதி செய்தது!

டந்த வாரம் கண்ணகி சிலைத் திறப்பு விழாவின்போது தமிழக முதல்வர் கருணாநிதி, ஆனந்த விகடனில் வெளியான - பத்திரிகையாளர் ஞாநியின் கட்டுரையைக் குறிப்பிட்டு, தன் குமுறலை வெளிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து தி.மு.க-வினர், ஆனந்த விகடன் பிரதிகளைக் கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உடனே, 'விகடன் குழும இதழ்கள் கைமாறிவிட்டதை மறைக்கும் விதமாகவே விகடனும் முதல்வர் கருணாநிதியும் மோதிக்கொள்வது போல் நாடகம் நடக்கிறது' என்று பிசுபிசுத்துப்போன தங்களின் பழைய புரளிக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் முயற்சியில் அதே சக்திகள் இறங்கிவிட்டன!

இன்னொரு பக்கம், இன்றைய எதிர்க்கட்சித் தலைவியான ஜெயலலிதாவின் சட்டமன்றப் பிரவேசத்தை வரவேற்று வெளியான ஆனந்த விகடனின் கட்டுரைக்கு, ஆளுங்கட்சியான தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடு கடும் கண்டனம் தெரிவிக்கத் துவங்கியிருக்கிறது. விகடனின் எழுத்துக்களுக்கு சாதிரீதியான சாயம் பூசப்பார்க்கும் விஷமத்தனமான வேலையையும் அந்த நாளேடு செய்து வருகிறது!

'வி லை போய், கருணாநிதியோடு சேர்ந்துகொண்டு நாடகம் ஆடுகிறார்கள்' என்றும், 'சாதிப் பற்றுடன் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக எழுதுகிறார்கள்' என்றும் ஒரே குழுமத்தைச் சேர்ந்த பத்திரிகைகளின் மீது, இரண்டு துருவங்களாக நிற்கும் கட்சிகள் ஏககாலத்தில் தாக்குதல் தொடுப்பதன் காரணம் என்னவாக இருக்க முடியும்?

விகடன் குழும இதழ்களின் நடுநிலை பற்றியும் நம்பகத்தன்மை பற்றியும் அதன் வாசகர்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள்; நாளுக்குநாள் அந்த வாசகர்களின் வட்டம் விரிந்துகொண்டே போகிறது. தவறு எந்தப் பக்கம் இருந்தாலும் அதைத் தயங்காமல் சுட்டிக்காட்டும் விகடன் விமர்சனங்களின் கூர்மையும் நேர்மையும் மக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தோடு விவாதிக்கப்படுகிறது. இதெல்லாம்தானே இந்த இருமுனைத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்க முடியும்!

புரளி பரப்பியோ சாதிச் சாயம் பூசியோ விகடனைச் சலனப்படுத்த யார் நினைத்தாலும் அவர்களுக்காகப் பரிதாபப்படத்தான் வேண்டும். ஏனெனில், விகடன் எப்போதும் எதற்காகவும் யாருக்காகவும் சலனப்பட மாட்டான். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பதெல்லாம் அவனுக்குக் கிடையாது. எப்போதுமே விகடன்... மக்கள் கட்சி!

வி கடனின் பேனாவால் பாராட்டப்படும்போது, அதையே பதக்கமாக அரசியல்வாதிகள் அணிந்து மகிழ்வதையும்... விமர்சனங்கள் வரும்போது தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்களே விகடன் மீது விஷவாள் பாய்ச்சுவதையும் வாசகர்கள் அர்த்தம் செறிந்த புன்னகையோடு பார்த்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்!

அமரர் எஸ்.எஸ்.வாசன் ஏற்றிவைத்த விகடன் எனும் கொள்கைத் தீபம், அவருடைய குடும்ப வழித்தோன்றல்களின் கரங்களிலேயே இன்றும் கம்பீரமாகப் பிரகாசிக்கிறது.

தலைமுறைகள் தாண்டினாலும், கோடிக்கணக்கான வாசகர்களின் உறுதியான நம்பிக்கையுடன், அவர்களிடம் விகடனைக் கொண்டு சேர்க்கும் முகவர்களின் ஆதரவுடன், விகடனை உருவாக்கித் தருகின்ற ஊழியர்களின் ஒற்றுமையுடன்... துணிவு- நேர்மை- நடுநிலை ஆகிய உன்னதமான கொள்கைகளுடன்... இன்றுபோல் என்றென்றும் வெற்றிநடை போடுவான் விகடன்!

- பா.சீனிவாசன்,
இணை நிர்வாக இயக்குநர்,
விகடன் குழுமம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism