Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

எக்ஸிட் சர்வே சொல்லும் எச்சரிக்கை!

பிரீமியம் ஸ்டோரி
##~##

இந்தத் தலையங்கத்தை நீங்கள் படிக்கிற நேரத்தில், ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவு வெளியாகி அந்த மாநிலங்களில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதும் தெளிவாகி இருக்கும். தேர்தல் நடந்த அன்று எடுக்கப்பட்ட எக்ஸிட் சர்வே முடிவுகளின்படி, பா.ஜ.க.வுக்கு நான்கு மாநிலங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

இந்த எக்ஸிட் சர்வே முக்கியமாக உணர்த்தும் விஷயம், காங்கிரஸ் ஏற்கெனவே ஆட்சி செய்துவரும் ராஜஸ்தான் மற்றும் டெல்லி மாநிலங்களை இழப்பதும், அதேசமயம், மத்தியப்பிரதேசம் மற்றும் சட்டீஸ்கரை பா.ஜ.க தக்கவைத்துக் கொள்வதும் ஆகும்.

எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், அது நல்லவிதமாக அமையும்பட்சத்தில், மக்கள் மீண்டும் மீண்டும் அந்தக் கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பைத் தரத் தயங்கமாட்டார்கள். ஆனால், ஆட்சியில் சுணக்கம் காட்டினால், ஒழித்துக்கட்டவும் அஞ்ச மாட்டார்கள் என்பதையே இந்த எக்ஸிட் சர்வே நமக்கு உணர்த்துகிறது.

பா.ஜ.க இந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பெரிய வெற்றி காண்பதன் மூலம் அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்பதற்கான வாய்ப்பு இருப்பதாக பல ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

ஹலோ வாசகர்களே..!

மோடி பிரதமரானால், நாட்டின் வளர்ச்சி அதிகமாகும் என மக்கள் எதிர்பார்த்தாலும், அந்த வேலையை அவரால் அவ்வளவு சுலபமாகச் செய்துவிட முடியாது. இப்படி சொல்வதற்கு பல காரணங்கள் உண்டு. முதலாவதாக, எண்ணெய் நிறுவனங்களுக்கு இன்றைய அரசாங்கம் தரவேண்டிய மானியத் தொகையைத் தொடர்ந்து தராமல் இருப்பது, அடுத்து அமையும் அரசாங்கத்துக்குப் பெரிய சுமையாக இருக்கும்.

இரண்டாவதாக, நிலம் கையகப்படுத்துவதற்கான சட்டங்கள் தொழில் துறையின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக அமையும். மூன்றாவதாக, உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கான செலவு ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிச் சென்று பயமுறுத்தும்.

இதுபோன்ற இன்னும் பல பொருளாதாரப் பிரச்னைகளை சமாளிக்க, புதிய தீர்வுகளுடன் நரேந்திர மோடி ஆட்சிக்கட்டிலில் ஏறினால்தான், அவரால் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். இல்லையெனில், மீண்டும் குஜராத்தை நோக்கியே அவர் திரும்பிச் செல்லவேண்டியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

                                            - ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு