Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

கோடை விடுமுறை நெருங்கிக்கொண்டிருக்கிறது... 'எப்போது பார்த்தாலும், டி.வி-யையும் கம்யூட்டரையுமே கட்டிக்கொண்டு அழப்போகின்றன... இந்தக் குழந்தைகள்' என்று பலரும் கவலையில் ஆழ்ந்திருப்பீர்கள். இதற்கு நடுவே, சமீபத்தில், உறவினர் வீட்டுக்குப் போயிருந்த எனக்கு, வேறுவிதமான கவலையும் ஒட்டிக்கொண்டது.

அந்த வீட்டிலிருந்த வாண்டுகள், படுசீரியஸாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தனர். இடையில் ஒரு ஜெல்லி மிட்டாய் விளம்பரம்.

ஆசையாக அணைக்க வரும் அம்மாவைத் தவிர்த்துக்கொண்டே இருப்பான் மகன். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'இந்த பையன், அம்மாவோட தாய்ப்பாசத்தைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்குறான். ஏன்... ஏன்... ஏன்?’ என்று வசனம் ஒலிக்கும்போதே... பாக்கெட்டிலிருந்து மிட்டாயை எடுத்துச் சாப்பிடுவான் மகன். கூடவே, ஆசையாய் தொடவரும் தாயை, இடித்துத் தவிர்ப்பான்.

நமக்குள்ளே...

இதைப் பார்த்த அந்த வீட்டு வாண்டு, 'அம்மா... இந்த மிட்டாயை சாப்பிட்டா, தாய்ப்பாசத்தையே மறந்துடுவாங்களாம். அப்ப எதுக்காக இதைக் கடையில விக்கிறாங்க?’  எனக் கேட்க... நான் 'ஷாக்' ஆனேன்.

கொஞ்ச நேரத்திலேயே வந்துவிழுந்தது மற்றொரு சாக்லேட் விளம்பரம்...

'பல வருடங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைகள், சிரித்துக்கொண்டே பிறந்தார்கள். இப்போது சீரியஸ்னெஸ் என்கிற கொடிய நோய் தாக்கியதால், அழுதுகொண்டே பிறக்கிறார்கள்...' என்கிற வசனம் ஒலிக்க... இதுக்கு ஒரே தீர்வு... சாக்லேட்டை ஊசி போல வாயில் திணித்துக்கொள்வதுதான் என்று காட்சி விரியும். அம்மாக்களின் கால் இடைவெளியிலிருந்து 'பச்சக்.... பச்சக்' என்று குழந்தைகள் பிறந்து விழுவது போலவும் காட்டியிருக்கிறார்கள்.

இதைப் பார்த்த உறவுக்கார பெண்மணி, 'அப்பப்பா... எப்படித்தான் யோசித்து  விளம்பரம் எடுக்கிறார்களோ?' என்று தலையில் கைவைத்த அதேநேரம், 'அம்மா,  நான் சிரிச்சுட்டே பொறந்தேனா... இல்ல, அழுதுட்டே பொறந்தேனா?' என தன் பங்குக்கு ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தது அந்த வீட்டு வாண்டு!

பொதுவாக, விளம்பரங்கள் என்றாலே.... பெரும்பாலும் குழந்தைகளைக் குறிவைத்துதான் வந்துவிழுகின்றன. அப்படியிருக்கும்போது, குழந்தைகளின் மனங்களில் எதிர்மறையான, தவறான எண்ணங்களை உருவாக்கும் வகையிலும், அருவருக்கத்தக்க வகையிலும்... 'கிரியேட்' செய்வது எந்த அளவுக்கு நியாயம்?

சரி, இதைப் பற்றி அவர்கள் யோசிக்கட்டும்.

நம் வீட்டு வரவேற்பறைக்குள்ளேயே வந்துவிழும் இத்தகைய தாக்குதல்களையெல்லாம் புரிந்து... 'நல்லது எது... எது கெட்டது?' என்று குழந்தைகளுக்குப் புரியவைப்பதைப் பற்றி நாமும் யோசிப்போம்!

என்ன... நான் சொல்வது சரிதானே தோழிகளே?!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்