பிரீமியம் ஸ்டோரி

ன்ன... சித்திரைத் திருநாளை வரவேற்க எல்லோரும் தயாராகிவிட்டீர்கள்தானே!

'யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே’ என்பதுபோல, 'சித்திரை வரும் பின்னே... அதன் வாசம் வரும் முன்னே’ என்றொரு புதுமொழி கூறி ஆச்சர்யத்தில் அசத்தினார் அலுவலகத் தோழி!

'அதென்ன சித்திரை வாசம்... உனக்கும் மட்டுமே அடிக்குமோ?!' என்றேன்.

''வசந்தத்தின் வாசத்தை உணராமல், எப்படி மனிதனாக இருக்க முடியும்?'' என்றபடியே, தன் இளவயது நினைவுகளைப் பகிர்ந்தார் தோழி.

''சித்திரை மாதம் வருவதற்கு முன்பே, அரசமரங்களில் இலையுதிர ஆரம்பித்திருக்கும். மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அதேசமயம், வேப்பமரங்களில் வேப்பம்பூக்கள் பூத்துக் குலுங்கும். இந்த மரங்களின் தளிர்வாசம், காற்றில் கலந்து நமக்குச் சொல்லும்... 'வசந்தம் வந்தாச்சு’ என்று.

நமக்குள்ளே...

என் பாட்டி வீட்டில் சித்திரை திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். அன்றைய தினம்... வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, பாயசம், மசால்வடை என தடபுடல் விருந்துதான். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை உணவை சாமிக்கு படையல் போடுவார் பாட்டி.

'மனித வாழ்க்கையில் இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டவே இத்திருநாள் வருகிறது. வேப்பம்பூ கசக்கும்... என்றாலும், மனித உடலிலுள்ள ரத்தத்தைத் தூய்மை செய்வதில் அதற்கு நிகரில்லை' என்று பல ஆண்டுகளுக்கு முன் என் பாட்டி சொன்னது... இன்னமும் நினைவில் ஒலிக்கிறது.

ஆனால், இப்போது பீட்சா... பர்கர்... இதுபோன்றவைதானே நம் குழந்தைகளின் 'ஃபேவரைட்' உணவாக இருக்கிறது. அவர்களுக்கெல்லாம் வேப்பம்பூ பற்றியோ... மாந்தளிர் பற்றியோ புரியவைக்க, நான்கூட முயற்சிப்பது இல்லை'' என நொந்துகொண்டார் தோழி.

'பண்டிகைகளும்... அதன் மகத்துவங்களும் காரண, காரியங்களுடனேயேதான் ஆரம்பமாயின. ஆனால், இன்று காரியம் இருக்கிறது... காரணம் மறைந்துவிட்டது. எங்கோ சிற்சில கிராமங்களில் மட்டுமே கொஞ்சமாக வாழ்கிறது' என்கிற மகத்தான உண்மையையும் போகிற போக்கில் தோழி பதியவிட்டுச் சென்றாலும்... அது நாள் முழுக்கவே என் சிந்தனையைத் தூண்டிவிட்டது என்னவோ உண்மை.

உங்களுக்கு?

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு