ஸ்பெஷல்
Published:Updated:

எப்போதும் முதலீட்டாளர்களின் நண்பன்!

எப்போதும் முதலீட்டாளர்களின் நண்பன்!

ஹலோ வாசகர்களே..!

எப்போதும் முதலீட்டாளர்களின் நண்பன்!

இதோ உங்கள் கைகளில் புத்தம் புதிய பொலிவுடன் தவழ்ந்துகொண்டிருக்கிறது நாணயம் விகடனின் 300-வது சிறப்பிதழ். ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளுக்குமுன், தமிழகத்தின் பெருவாரியான மக்களுக்கு வங்கியில் முதலீடு செய்வதைத் தவிர வேறு எதுவும் பெரிய அளவில் தெரிந்திருக்காத நிலையில், பங்குச் சந்தை பற்றியும் மியூச்சுவல் ஃபண்ட் பற்றியும் விளக்கமாக எடுத்துச் சொல்லி, பல்வேறு புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தது நாணயம் விகடன்.

நிதி மேலாண்மை என்பது நிம்மதியான வாழ்க்கைக்கு அடிப்படை என்பதை எடுத்துச் சொல்லி, ஒவ்வொருவரும் தங்களது குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, சரியான திட்டமிடலை செய்து, நாணயம் விகடன் வகுத்துக்கொடுத்த வழியைப் பின்பற்றி பாராட்டாதவர்களே இல்லை. அதேபோல, கடனில் சிக்கித் தவித்தவர்களை அதிலிருந்து மீட்ட பெருமையும் நாணயம் விகடனுக்கு உண்டு.

தமிழ்நாட்டில் பலரும் தொழில் தொடங்க, லாபகரமான தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி, பிசினஸ் யுக்திகளைக் கற்றுத்தந்ததன் மூலம் புதிய தொழில்முனைவோர்களாக அவதாரம் எடுத்தவர்கள் பலர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, உழைத்துச் சம்பாதித்த பணத்தைப் பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, இரவோடு இரவாகக் கொள்ளை அடித்துக்கொண்டு செல்லும் பிளேடு கம்பெனிகளைப் பற்றியும் அவ்வப் போது உஷார்படுத்தியதன் மூலம், பலரது பணத்தை பறிபோகாமல் காப்பாற்றிய பெருமையும் நாணயத்துக்கு உண்டு.

ஆக, வளமான வாழ்க்கை, கூடுதல் வருமானம், சிறந்த முதலீடு, ரியல் எஸ்டேட், தங்கம் என எல்லா விஷயங்களிலும் ஏமாறாமல் இருப்பதற்கான அத்தனை வழிமுறைகளையும் தொடர்ந்து எடுத்துச்சொல்லி வருவதாலேயே வாசகர்களின் உற்ற நண்பனாக நாணயம் விகடன் இன்றைக்கும் இருந்து வருகிறது. இதனால்தான், 'ஐம்பது வயதில் எனக்குக் கிடைத்த நாணயம் விகடன், முப்பது வயதில் கிடைத்திருந்தால் என் வாழ்க்கை வேறுமாதிரியாக இருந்திருக்கும்’ எனப் பலரும் வாய்விட்டுப் பாராட்டுகிறார்கள்.

எப்போதும் முதலீட்டாளர்களின் நண்பன்!

இதுநாள்வரை நாணயம் விகடன் தனது வாசகர்களுக்குச் செய்ததைவிட, இனிவரும் காலத்தில் இன்னும் அதிக ஆர்வத்துடனும் அக்கறையுடனும் செயல்பட உறுதிபூண்டிருக்கிறது. நிதி தொடர்பான அத்தனை விஷயங்களும் முன்பைவிட சிக்கலானதாக மாறியிருக்கும் இந்தச் சமயத்தில் நாணயம் விகடனின் பொறுப்பும் அதிகரிப்பது இயற்கைதானே! 300-வது இதழ் என்னும் இந்த மைல்கல்லைத் தொட உறுதுணையாக இருந்த வாசகர்களுக்கு நன்றிகூறும் இந்தத் தருணத்தில், நாணயம் விகடன் என்றென்றும் உங்களின் உற்ற நண்பனாகவே இருக்கும்!

  - ஆசிரியர்.