நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த அன்று, மதிய உணவுக்காக ஒரு ஹோட்டலுக்கு சென்றிருந்தேன். அதன் அருகில் செயல்படும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஆண் - பெண் ஊழியர்களும் அங்கே குழுமியிருந்தனர். தேர்தல் முடிவுகளைப் பற்றி உற்சாகம் பொங்க சற்றே சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். பொதுவாக, 'அரசியல் உரையாடல்களில் ஒதுங்கி நிற்பார்கள்' என்று வர்ணிக்கப்படும் பெண்கள், இங்கே தங்களையும் ஆர்வத்துடன் இணைத்துக் கொண்டது... ஆச்சர்யமாகவே இருந்தது!
''சாதி, மதம்... போன்றவற்றை பின்னுக்குத் தள்ளி, 'வளர்ச்சி வளர்ச்சி' என்று கிளிப்பிள்ளை போல நாடு முழுவதும் 'வளர்ச்சி' ஒன்றையே முன்னிலைப்படுத்தியதால் தான் மோடிக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்'’ என்று ஒரு பெண் சொல்ல,


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''பத்து ஆண்டுகளாக தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியைப் பார்த்து அலுத்துப் போனால்தான் மாறுதலுக்காக வாக்களித்திருக்கிறார்கள்’' - இன்னொரு பெண் தன் கருத்தை பதிவுசெய்தார்.
''இது ஜனநாயக நாடு. டீ கடை வைத்திருப்பவர்கூட ஆட்சிக்கு வரலாம் என்பது நிரூபணமாகியிருக்கிறது'' என்று கூட்டத்திலேயே மிகவும் துடிப்பான ஓர் இளம்பெண் சிரித்தபடியே சொல்ல,
''ஜனநாயக நாடு சரி. ஆனால், மோடி எந்த அளவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவர் என்பதை இனிதான் நிரூபிக்க வேண்டும்’'
- வெடுக்கென்று சொன்னார் இன்னோர் இளம்பெண்.
இப்படி நீண்டுகொண்டே போன உரையாடலில், 'மோடி ஏன் மனைவியுடன் சேர்ந்து வாழவில்லை’, 'ஓர் இளம் பெண்ணை கண்காணிப்பதற்கு முதலமைச்சர் பதவியை மோடி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு உண்டே’ என்றெல்லாம், 'நெகட்டிவ்' விஷயங்களையும் அலசித் தீர்த்தனர்.
''அமெரிக்கா, ரஷ்யா போன்ற பல நாடுகளில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய, நடுத்தர வயதுள்ள தலைவர்கள் ஜனாதிபதி, அதிபர் என்றெல்லாம் தலைமைப் பதவிகளில் அமர்கிறார்கள். ஆனால், இதுபோல நடப்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், இங்கு இன்னும் வரவில்லை?'' என்று யாரும் எதிர்பாராத கோணத்திலிருந்து ஒரு கருத்தைச் சொன்னார், அவர்களில் சற்றே அதிக வயது கொண்ட ஒரு பெண்!
பெண்களின் இந்த உரையாடல் இன்னும் சுவாரஸ்யமானதாக இருந்தாலும், அலுவலக வேலைகள் அவசரமாக அழைக்க... அரை மனதோடு திரும்பினேன். என் மேஜையில், 'அரசியலில் பெண்கள் ஏன் அதிக அளவில் அக்கறை காட்டுவதில்லை?’ என்கிற ஒரு கட்டுரை, என் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டிருந்தது. தலைப்பு மட்டுமில்லை... கட்டுரையே இந்த நேரத்துக்கு தொடர்பில்லாததுபோல இருந்தது!
என்ன, நான் சொல்வது சரிதானே தோழிகளே!
உரிமையுடன்

ஆசிரியர்