Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:

கோடை விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்று திரும்பியிருந்த தோழியையும், அவள் குழந்தையையும் சமீபத்தில் நேரில் பார்த்தபோது, அவர்கள் முன்பைவிட ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

''ஊருக்குப் போய் வந்த சந்தோஷம், முகத்துல அப்படியே ஜொலிக்குதே'' என்றேன் சிரித்தபடியே குட்டியிடம்!

நமக்குள்ளே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆமாம், ஊர்ல ஆடு பாத்தோம்... மாடு பாத்தோம்... டக்கு பாத்தோம்... ஃப்ரூட்ஸ் எப்படி காய்க்குதுனு பாத்தோம்'’ என தலையை ஆட்டி ஆட்டி அழகாக பாடமெடுத்தாள் தோழியின் சுட்டிக் குழந்தை. அவள் சொல்லும் அழகிலேயே, அள்ளிக்கொள்ளலாம் போலிருந்தது. கொடி வளர்வது, கோழி வளர்வது எல்லாவற்றையும் வெறும் ஏட்டுக்கல்வியாகவே பதித்துக்கொண்டிருந்த அந்த பிஞ்சுக் குழந்தையை, நேரடிக் காட்சிகள்... மனதளவில் வேறு உலகத்துக்குக் கொண்டுசேர்த்திருப்பதை நன்றாகவே உணர முடிந்தது!

இத்தகைய வாய்ப்பு, பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கு வாய்க்கவேண்டும். ஆனால், மதிப்பெண்களை மட்டுமே பிரதானப்படுத்தி ஓட்டமெடுத்துக்கொண்டிருக்கும் பெரும்பாலான பள்ளிகள், இதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதே இல்லை என்பது, நம்முடைய சாபம்தான். ஆனால், 'இன்டர்நேஷனல் பள்ளிகள்' போன்ற சில பள்ளிகளில் 'ஃபீல்டு டிரிப்' என்கிற வகையில், பாடத்துக்குத் தொடர்புடைய இடங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று காண்பிக்கும் முறை, ஆரம்பத்திலிருந்தே வழக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது!

காடுகளைப் பற்றிப் படித்தால், அருகில் உள்ள காடுகளுக்கு நேரடியாக அழைத்துச் செல்வது; மருத்துவர் என்றால், மருத்துவமனை; கலெக்டர் என்றால், கலெக்டர் அலுவலகம், நெற்பயிர் என்றால், வயல்வெளி... இப்படி அழைத்துச் செல்வதுடன், சம்பந்தப்பட்ட இடங்களில் தங்களுக்கு தோன்றும் சந்தேகங்களை கேள்விகளாக்கி, அங்கேயே விடையைத் தேடித் தெரிந்துகொள்வதற்கும் வழி செய்யப்படுவதுதான் ஃபீல்டு டிரிப்!

தனியார் பள்ளிகளில் பலவற்றிலும் இந்த 'ஃபீல்டு டிரிப்' முறை, தற்போது முளைவிட்டிருப்பதாக, தோழிகள் சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், தனியார், அரசு என அத்தனை பள்ளிகளிலும் இது முளைவிடுவதுதானே சரியானதாக இருக்க முடியும்!

நகரத்து மாணவர்களுக்கு கிராமமும்... கிராமத்து மாணவர்களுக்கு நகரமும் எப்போதுமே வியப்புதான். என்றாலும், கல்வி, வேலைவாய்ப்பு என கிராமத்து மாணவர்கள்கூட ஒரு கட்டத்தில் நகரத்தை எட்டிப் பார்த்துவிடுகிறார்கள். ஆனால், நகர்ப்புற மாணவர்களுக்குத்தான் கிராமங்கள் எப்போதும் தூரதேசமாகவே இருக்கின்றன!

இயந்திரத்துக்குள் மட்டுமே மூழ்கிப் போகாமல், இயற்கையோடு வாழ்கிற வாய்ப்பை, அடுத்த தலைமுறைக்கு கிடைக்க வழிசெய்வோமா?!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism