Published:Updated:

நம்பிக்கை வைப்போம், பங்குச் சந்தை மீது!

நம்பிக்கை வைப்போம், பங்குச் சந்தை மீது!

பிரீமியம் ஸ்டோரி

ஹலோ வாசகர்களே..!

நம்பிக்கை வைப்போம், பங்குச் சந்தை மீது!

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 25000 புள்ளிகளையும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 7500 புள்ளிகளையும் கடந்து சென்று முதலீட்டாளர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த வேகம், சென்செக்ஸ் 40000 புள்ளிகளையும், நிஃப்டி 11000 புள்ளிகளையும் நீண்ட கால நோக்கில் அடைய வைக்கும் என்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள்.  

1979-ம் ஆண்டு 100 புள்ளிகளுடன் தொடங்கிய சென்செக்ஸ், ஏறக்குறைய 11 ஆண்டுகள் கழித்து 1000 புள்ளிகளைத் தொட்டது. 5000 புள்ளிகளைத் தொட அடுத்த ஒன்பது ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. 2005-ல் 7000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ் அதிவேகத்தில் முன்னேறத் தொடங்க, 2007-ன் முடிவில் 20000 புள்ளிகளுக்குமேல் உயர்ந்தது. இந்தக் காலத்தில்தான் பல லட்சம் புதிய முதலீட்டாளர்கள் சந்தைக்கு வந்தனர்.

ஆனால், 2008-ல் சரியத் தொடங்கிய சந்தை, அந்த ஆண்டு முழுக்க சரிந்துகொண்டே இருந்தது. பங்குச் சந்தை பற்றி சரியான புரிதல் இல்லாமல், பொறுமையிழந்த சிலர் நஷ்டத்தோடு சந்தையைவிட்டு வெளியேறினார்கள்.  ஆனால், பங்குச் சந்தை நீண்ட கால நோக்கில் லாபம் தரும் என்பதைப் புரிந்துகொண்டு நம்பிக்கையோடு தொடர்ந்து முதலீடு செய்தவர்கள், இன்றைக்கு பெரிய அளவில் லாபம் கண்டிருக்கிறார்கள். கடந்த ஓராண்டுகாலத்தில் சென்செக்ஸ் ஏறக்குறைய 20 சதவிகிதத்துக்குமேல் லாபம் தந்திருக்கிறது. இந்த லாபம் கடந்த ஓராண்டில் வேறு எந்த முதலீட்டிலும் கிடைக்கவில்லை.

நம்பிக்கை வைப்போம், பங்குச் சந்தை மீது!

பங்குச் சந்தை முதலீடு என்பது ரிஸ்க் கொண்டதுதான். ஆனால், பொருளாதார அறிவை விரிவாக்கிக் கொள்வதன் மூலம் இந்த ரிஸ்க்கை யாராலும் நிச்சயம் தாண்டி வரமுடியும். தவிர, எந்த முதலீடும் குறுகிய காலத்தில் லாபம் தரும் என்று எதிர்பார்க்கக் கூடாது. கவனத்துடன் கூடிய பின்தொடரலும் பொறுமையும் இருந்தால் மட்டுமே இதில் லாபம் பார்க்க முடியும்.

புதிய அரசின் கொள்கைகளால் பொருளாதாரம் முன்னேறத் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன. இந்தத் தருணத்தைத் தவற விடாமல், பணவீக்கத்தை விஞ்சிய லாபம் தரக்கூடிய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்கள், குறைந்தபட்சம் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி முறையிலாவது முதலீடு செய்ய வேண்டும். இதற்கு முதலில், நாம் அனைவரும் இந்தியப் பொருளாதாரத்தின் மீதும் பங்குச் சந்தையின் மீதும் நம்பிக்கை வைப்போம்!

- ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு