ஸ்பெஷல் 1
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

 ''சீரியல் பேச... ஷாப்பிங் போக... சினிமா கிசுகிசு பேச...

ஸ்கூல் புராஜெக்ட், ஹோம்வொர்க் காப்பி அடிக்க...

இதுக்கெல்லாம் உடனடியாக தோழியர் கிடைத்துவிடுகிறார்கள்.

வாக்கிங் போக... புதுசா ஒரு கிளாஸ் போய் கத்துக்க... பேட்மின்டன் விளையாட...

ம்ம்ம்ம்ஹூம்... யாரும் கிடைக்க மாட்டேங்கிறாங்களே!''

- இப்படியொரு ஸ்டேட்டஸை சமீபத்தில் ஃபேஸ்புக்கில் பார்த்தேன். தோழிகள் பலரிடமும் இதைப் பகிர்ந்தபோது, அனுபவபூர்வமான பல யோசனைகள் வந்துவிழுந்தன.

நமக்குள்ளே...

''ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு மாதிரியான சூழ்நிலைதான் இருக்கிறது. இதற்கு நடுவே, 'நான் இந்தி படிக்கப் போகிறேன். நீயும் வருகிறாயா?’ என்று பக்கத்து வீட்டுத் தோழியைக் கூப்பிட்டால், அவர் வராமலிருக்க ஆயிரம் காரணங்கள் இருக்கத்தானே செய்யும்! ஆனால், உங்கள் பிள்ளை இந்தியோ... கீ-போர்டோ கற்றுக்கொள்ளப் போகும் இடத்தில், நீங்களும் குழந்தையோடு அந்த வகுப்பில் சேர்ந்துவிடுவது உத்தமம்'' என்று ஒரு தோழி யோசனை கொடுத்திருந்தார்.

''நாளையில் இருந்து வாக்கிங் போகலாம் என்று முடிவெடுத்தால், பக்கத்து வீட்டுத் தோழி வருகிறாரா என்று முயற்சித்துப் பாருங்கள். தப்பில்லை. ஒருவேளை, அவரால் முடியாவிட்டால் உங்கள் கணவர்/மகன்/மகளை உங்களோடு வாக்கிங் வர உற்சாகப்படுத்துவது அதைவிட சுலபம். அவர்களால் வரமுடியாவிட்டாலும் பரவாயில்லை. வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பார்க்கில் தனியாகவே வாக்கிங் சென்று பாருங்கள். அங்கே உங்களைப் போல தனியாக பல பெண்கள் உங்கள் வீதியில் இருந்தே வாக்கிங் வந்திருப்பார்கள். அவர்களை தோழியாக்கிக்கொண்டால், உங்களுக்கு கம்பெனி கியாரன்டி'' - இது இன்னொரு முகநூல் தோழியின் யோசனை.

ஆழமாக யோசித்தால், இந்த ஐடியா க்ளிக் ஆகும் என்றே தோன்றுகிறது. காரணம், உலகம் பெரியது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பலரை நாம் சந்திக்கும்போது, நமது பார்வை விசாலமடையும். பல மொழி பேசுகிறவர்களுடனும், பல ஊர்களை சேர்ந்தவர்களுடனும் பழகும்போது பலதரப்பட்ட கலாசாரங்களும் நம்மையும் அறியாமல் அறிமுகமாகும். புத்தகங்களைப் படிப்பது போலவே, புதிய மனிதர்களைப் படிக்கும்போதும் நமது அறிவு செறிவுபடும்தானே!

நீங்கள் எதன் மீது ஆசைப்படுகிறீர்களோ... அது நிச்சயம் கிடைக்கும் - விடா முயற்சி இருந்தால் என்பதுதானே நிஜம் தோழிகளே!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்