ஹலோ வாசகர்களே..!

இப்போது ஓரளவுக்கு உயர்ந்து வரும் நம் பங்குச் சந்தையில், சிறு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்கெடுப்பதை ஊக்குவிக்கும் விதமாகப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இதில் முக்கியமானது, அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில், பொதுமக்களிடம் இருக்க வேண்டிய பங்கு மூலதனத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 10 சதவிகிதத்திலிருந்து குறைந்தபட்சம் 25 சதவிகிதமாக உயர்த்தியதாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தற்போது முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில், அரசு வைத்திருக்கும் 75 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ள பங்குகளைக் குறைப்பதன் மூலம் மத்திய அரசாங்கத்துக்கு சுமார் 60,000 கோடி ரூபாய் கிடைக்கும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிகம் பயன்படும்.
மேலும், முன்னணியில் இருக்கும் 200 கம்பெனிகள் தங்கள் பங்குகளை ஆஃபர் பார் சேல் (ளிதிஷி) மூலம் பங்குச் சந்தைக்கு விற்க நினைக்கும்போது இதில் 10 சதவிகிதத்தை சிறுமுதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டும் எனவும் செபி சொல்லியிருக்கிறது.
செபியின் இந்த நடவடிக்கைகள் சிறு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குச் சந்தைக்கு வருவதற்கு வழிவகுக்கும் என்பதால், இந்த நடவடிக்கைகளை நாம் வரவேற்பதோடு, பாராட்டவும் வேண்டும்.
செபியின் இந்த அறிவிப்புகளால் ஐபிஓ-களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும். இதனால் பங்குச் சந்தை இன்னும் வேகமாக வளரும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால், இந்த நடவடிக்கைகள் மட்டுமே போதும் என்று சொல்லிவிட முடியாது. பங்குச் சந்தையில் முதலீடு செய்கிற மக்களின் எண்ணிக்கை 3 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. பெரிய நகரங்களில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிகிற ஒரு முதலீடாக பங்குச் சந்தை முதலீடு இருக்கிறது. இதனால், பணவீக்கத்தை சரிக்கட்டும் அளவுக்குக்கூட வருமானம் தராத முதலீடுகளிலேயே பணத்தைப் போட்டு லாபத்தை இழக்கின்றனர் பலர்.
ஆனால், சந்தை நிலைமைகளைப் புரிந்துகொண்டு, சரியான பங்குகளை வாங்கி, அவற்றை நீண்ட காலத்துக்கு வைத்திருந்தால், மிகப் பெரிய லாபத்தைப் பார்க்க முடியும் என்பதே பங்குச் சந்தையின் சிறப்பு.
இந்த உண்மையை இந்தியா முழுக்க உள்ள அனைத்து மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே நம் பங்குச் சந்தை அடுத்தகட்டத்துக்குச் செல்லும்! அதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செபி செயல்படுத்தினால்தான், நம் நாடு வளர்ந்த நாடுகள் பட்டியலில் இடம்பெற முடியும்!
- ஆசிரியர்.