Published:Updated:

ரிசர்வ் வங்கிக்கு சபாஷ்!

ரிசர்வ் வங்கிக்கு சபாஷ்!

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த தனது முதல் பட்ஜெட்டில் உள்கட்டமைப்புத் துறையின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை அறிவித்திருந்தார். அரசின் இந்த நோக்கத்துக்கு உதவுகிற மாதிரி மத்திய ரிசர்வ் வங்கியும் ஒரு முக்கிய நடவடிக்கை எடுத்திருக்கிறது.

ரிசர்வ் வங்கிக்கு சபாஷ்!

உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான நிதித் தேவையை பூர்த்தி செய்ய வங்கிகள் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் முதிர்வுகொண்ட கடன் பத்திரங்களை வெளியிடலாம் என்றும், இந்தக் கடன் பத்திரங்கள் மூலம் வங்கிகள் திரட்டும் பணத்துக்கு சிஆர்ஆர், எஸ்எல்ஆர் போன்ற கட்டாய ஒதுக்கீடுகளைப் பின்பற்றத் தேவையில்லை என்றும் மத்திய ரிசர்வ் வங்கி சொல்லியிருக்கிறது. இதனால், இதற்கென திரட்டப்படும் நிதியை வேறு எந்தத் துறைக்கும் தராமல் முழுவதுமாக உள்கட்டமைப்புத் துறைக்கு மட்டுமே கடன் தர வழிபிறக்கும்.

பொதுவாக, உள்கட்டமைப்புத் திட்டங்கள் என்பவை அதிக முதலீடு தேவைப்படும் துறை. தவிர, ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு நீண்ட காலம் ஆகும். இந்தத் திட்டம் நிறைவேறி, செயல்பட ஆரம்பித்தபின்புதான் அதிலிருந்து வருமானம் வர ஆரம்பிக்கும். பல ஆயிரம் கோடி ரூபாய் பல ஆண்டு காலத்துக்கு முடங்கிவிடுவதால், எந்தப் பெரிய நிறுவனமும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கடன் தர முன்வருவதில்லை.

ரிசர்வ் வங்கிக்கு சபாஷ்!

நீண்ட காலமாக இருக்கும் இந்தப் பிரச்னைக்கு இப்போது நல்லதொரு தீர்வு கண்டிருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. என்றாலும், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையை வரவேற்கிற அதேநேரத்தில் இப்படி நிதி திரட்டி கடன் தருவதில் இருக்கும் முக்கியமான சிக்கல்களையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தவறக்கூடாது.

கடன் பத்திரங்கள் மூலம் திரட்டப்படும் நிதியானது தகுதியற்ற நிறுவனத்துக்கு கடனாகத் தந்து, அது திரும்பி வராமல் போனால், வங்கியின் எதிர்காலம் பாதிப்படைவதோடு, அதில் டெபாசிட் செய்திருக்கும் மக்களும் தங்கள் பணத்தை இழப்பதற்கு நிறையவே வாய்ப்புண்டு. எனவே, இதுமாதிரி எந்தச் சிக்கலும் ஏற்படாதபடிக்கு வங்கிகள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

என்றாலும், நாட்டின் வளர்ச்சிக்கு நிதி அமைச்சகமும் மத்திய ரிசர்வ் வங்கியும் ஒன்றிணைந்து செயல்பட தொடங்கியிருப்பது நல்ல அறிகுறிதான்! இதேமாதிரி நிதி அமைச்சகமும் மத்திய ரிசர்வ் வங்கியும் இனிவரும் காலத்திலும் செயல்பட ஆரம்பித்தால், நம் பொருளாதார வளர்ச்சி இன்னும் பெரிய அளவில் இருக்கும் என்பது நிச்சயம்!

-ஆசிரியர்.