Published:Updated:

மோசடி நிறுவனங்களுக்கு அரசு ஆதரவா?

மோசடி நிறுவனங்களுக்கு அரசு ஆதரவா?

பிரீமியம் ஸ்டோரி

ஹலோ வாசகர்களே..!

 

மோசடி நிறுவனங்களுக்கு அரசு ஆதரவா?

மக்களின் பணத்தைச் சுருட்டிக்கொண்டு ஓடும் பொன்ஸி நிறுவனங்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருகிற அதிகாரத்தைப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபிக்கு தர, பொருளாதார நடவடிக்கைகளுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் கூடிய விரைவில் இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக இயற்றப்படும் நிலை உருவாகியுள்ளது.

மோடியின் அரசு மேற்கொண்டுள்ள இந்த முடிவானது நிச்சயம் வரவேற்கத்தக்கது. காரணம், இன்றைக்கு இந்தியா முழுக்க மக்களின் பணத்தைக் கொள்ளை அடித்துக்கொண்டு செல்லும் பொன்ஸி நிறுவனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் மட்டுமல்ல, நகர்ப்புறங்களிலும் இந்த மோசடி நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகம். சஹாராவும் சாரதா நிறுவனமும் நகர்ப்புறங்களில் உள்ள மக்களையே அதிக அளவில் ஏமாற்றியிருக்கிறது.

இந்த மோசடி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் காவல் துறைக்கும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸுக்கும் இருந்தாலும், அதனால் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் எந்தவகையிலும் குறைந்ததாகத் தெரியவில்லை. எனவேதான், செபிக்கு அதிக அதிகாரம் தரவேண்டியிருக்கிறது.

மோசடி நிறுவனங்களுக்கு அரசு ஆதரவா?

ஆனால், கேபினட் தற்போது அளித்திருக்கும் ஒப்புதலில், செபிக்கு தந்திருக்க வேண்டிய சில அதிகாரங்கள் பறிக்கப்பட்டிருப்பதாகத் தகவல். மோசடி நிறுவனங்களில் ரெய்டு மற்றும் ஆவணங் களை கைப்பற்ற செபிக்கு அதிக அதிகாரம் தந்தால், தவறு நடக்க வாய்ப்புண்டு. எனவே, எந்த ஒரு நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கும்முன்பு, சிறப்பு நீதிமன்றத்தில் செபி அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தகவல்.

தனக்குக் கிடைத்த அதிகாரத்தை செபி தவறாகப் பயன்படுத்தாது என நம்பலாம். சஹாராவின் சுப்ரதோ ராயை கிடுக்கிப்பிடிபோட்டு விசாரித்து சிறையில் தள்ளியதே இதற்கு நல்லதொரு சான்று. தவிர, ஒரு மோசடி நிறுவனத்தை விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி வாங்கும் நேரத்தில், அந்த நிறுவனம் உஷாராகி, முக்கிய ஆவணங்களை மறைத்துவிடவும் வாய்ப்புண்டு.

இதற்கெல்லாம் இடம்தராதபடிக்கு மோசடி நிறுவனங்களை ஒழித்துக் கட்ட கூடுதல் அதிகாரங்களை செபிக்கு தருவதே சரி. இந்த அதிகாரங்களை செபிக்கு தராதபட்சத்தில், மோசடி நிறுவனங்களுக்கு இந்த அரசாங்கம் மறைமுகமாக பாதுகாப்பு அளிக்கிறது என்கிற பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். மோடி அரசாங்கத்துக்கு இந்தப் பழிச்சொல் தேவைதானா?

- ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு