நடப்பு
Published:Updated:

மக்களின் நம்பிக்கையைக் குலைக்காதீர்கள்!

மக்களின் நம்பிக்கையைக் குலைக்காதீர்கள்!

ஹலோ வாசகர்களே..!

மக்களின் நம்பிக்கையைக் குலைக்காதீர்கள்!

சிண்டிகேட் நிறுவனத்தின் சிஎம்டி சி.கே.ஜெயின், பூஷண் நிறுவனத்தின் கடன் வரம்பை உயர்த்துவதற்காக 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதைத் தொடர்ந்து, சிபிஐயினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் இரண்டு பொதுத்துறை வங்கிகளில் வைப்புநிதியில் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி, வங்கிகளின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை பெரிய அளவில் ஆட்டம் காண வைத்திருக்கிறது.  

தேனா வங்கி மற்றும் ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கிகளின் மும்பை கிளைகளின்  வைப்பு நிதியில் போடப்பட்டிருந்த ரூ.436 கோடி  முறைகேடாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட ரூ.180 கோடியில் ரூ.110 கோடி திரும்ப கைப்பற்றப்பட்டுவிட்டது. ஆனால், தேனா வங்கியில் முறைகேடாக எடுக்கப்பட்ட ரூ.256 கோடியின் நிலைமைதான் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இந்த முறைகேடு எப்படி நடந்தது என்று ஆராய்ந்தால், வங்கியோடு சிறிதும் சம்பந்தம் இல்லாத சில புரோக்கர்கள் வங்கிகளின் முக்கிய செயல்பாடுகளை நடத்தி இருப்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. வங்கி மேலாளர்களுக்கு இருக்கும் நெருக்கடியை நன்கு புரிந்துகொண்ட இந்த புரோக்கர்கள், லஞ்சம் தந்தே மக்கள் பணத்தை சுருட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள். வங்கி அதிகாரிகளின் உதவி இல்லாமல், நிச்சயம் இது நடக்க முடியாது.

மக்களின் நம்பிக்கையைக் குலைக்காதீர்கள்!

வங்கிகளில் உள்ள கடுமையான விதிமுறை களை சரிவர பின்பற்றாததன் விளைவு, பல ஆண்டுகளாக சம்பாதித்த நற்பெயரை இழக்கும் ஆபத்துக்கு உள்ளாகி இருக்கின்றன வங்கிகள். நம் நாட்டில்,  வட்டி கிடைக்கும் என்பதைவிட பணம் பத்திரமாக இருக்கும் என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் வங்கி வைப்பு நிதிகளில் பணத்தைப் போடுகிறார்கள் மக்கள். அப்படி  வைக்கும் பணத்துக்கே பாதுகாப்பு இல்லை எனில், இனி எதை நம்பி வங்கிகளில் முதலீடு செய்வார்கள் மக்கள்?

பொருளாதாரம் உயிர்ப்போடு இருக்க வேண்டுமெனில், நிதி என்கிற பிராண வாயு, வங்கி என்னும் பாதுகாப்பான குழாய் வழியாக வரவேண்டும். இந்தக் குழாயில் தடையோ அல்லது ஓட்டையோ ஏற்பட்டால்,  பொருளாதாரம் மூச்சு திணறி இறந்துவிடும். ‘ஏதோ ஒரு வங்கிக் கிளையில் அடிமட்ட ஊழியர்கள் அளவில் நடந்த சம்பவ’மாக இதைக் கருதாமல்,  இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால்தான், மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும்!

                                                           - ஆசிரியர்.