Published:Updated:

முதன்மை மாநிலம் ஆக்குங்கள்!

முதன்மை மாநிலம் ஆக்குங்கள்!

தமிழகத்தின் ஜிடிபி வளர்ச்சி ஒவ்வொரு நாளும் கீழ்நோக்கிப் போகிறது என்கிற தகவல் நம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. உலகப் பொருளாதார மன்றம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, தொழில் தொடங்குவதற்கான போட்டித்திறனில் குஜராத் முதலிடத்தைப் பெற்றுள்ளது. சில ஆண்டுகளுக்குமுன் இந்த இடத்தில் தமிழகம் இருந்தது.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி கடந்த காலத்தில் இல்லாத அளவுக்கு 20122013ல் மிகவும் குறைந்துள்ளது. வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்கள் என்று கருதப்படும் பீகார் (10.73%), ஒடிசா (8.09%), மேற்கு வங்காளம் (6.72%) போன்ற மாநிலங்கள்கூட நல்ல பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால், தமிழகம் வெறும் 3.39 சதவிகித வளர்ச்சியை மட்டுமே கண்டிருப்பது அதிருப்தியையே தருவதாக உள்ளது. நம் நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சியே 4.5 சதவிகிதமாக இருக்கும்போது, நம்  மாநிலம் அடைந்திருக்கும் வளர்ச்சி எம்மாத்திரம்?

முதன்மை மாநிலம் ஆக்குங்கள்!

நமது மாநிலத்தில் தொழில் துறை வளர்ச்சி தேய்ந்து வருகிறது என்பதைத் தெரிந்துகொண்டுதான் கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேச மாநில முதல்வர்கள்  தமிழகத்துக்கு வந்து, நம் மாநிலத்து தொழிலதிபர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருவதாகக் கூறி தத்தம் மாநிலங்களுக்கு தொழில் தொடங்க வரவேற்கிறார் கள். இப்போது ஆந்திர மாநில ஐ.டி துறை அமைச்சரும் வரப்போகிறாராம். இவர்கள் நம் மாநிலத்து தொழில் முனைவோர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை நமக்கு மகிழ்ச்சி அளித்தாலும், தொழில் வாய்ப்புகள் வேறு மாநிலத்துக்குச் செல்வதனால் ஏற்படும் நஷ்டம் நம் அனைவருக்கும்தான் என்பதை நம் முதல்வர் அறியாதவர் அல்ல.

தமிழகத்தை மீண்டும் முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு பிற மாநில தொழிலதிபர்களை தமிழகத்துக்கு அழைத்துவர வேண்டும். குறைந்தபட்சம் நம் மாநிலத்தில் இருக்கும் தொழிலதிபர்களாவது பிற மாநிலங்களுக்குச் செல்லாத நிலையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை தமிழக அரசு உணர்ந்து தொழில் வளர்ச்சிக்கான சூழலை உருவாக்க வேண்டும். தொழில் மேம்பாட்டுக்கான இடம், மின்சாரம், உள்கட்டமைப்பு போன்றவற்றில் உள்ள பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும். தமிழக முதல்வரே நேரடியாக தலையிட்டு எல்லா இடர்பாடுகளையும் விரைவில் களையாவிட்டால், அவர் அறிவித்த விஷன் 2023 திட்டங்கள் கனவாகவே நின்றுவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

அறிவுக்கும் உழைப்புக்கும் பஞ்சமில்லாத நம் மாநிலத்தை முதன்மையாக்குவதே முதல்வரின் உடனடி நடவடிக்கையாக இருக்கட்டும்.

ஆசிரியர்.

அடுத்த கட்டுரைக்கு