Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

ஒரு திருமணத்துக்காக சீனியர் தோழிகள் இருவருடன் கடந்த வாரம் திருச்சிக்கு பயணம் மேற்கொண்டேன். கார், பெரம்பலூரை நெருங்கிய சமயத்தில், ''வழியிலதான் எங்க சின்னம்மா பொண்ணு வீடு. தலை காட்டிட்டு போவோமே'’ என்று அழைத்துச் சென்றார் ஒரு தோழி.

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அன்று கிருஷ்ண ஜெயந்தி என்பதால், வீடே களைகட்டியிருந்தது. அக்கம் பக்கக் குழந்தைகள் குழுமியிருந்தனர். பெரிய கிண்ணத்தில் கரைத்து வைத்திருக்கும் அரிசி மாவில், தன் மூன்று வயது பிஞ்சுக் குழந்தையின் பாதங்களை நனைத்து, வாசலிருந்து பூஜை அறை வரை கிருஷ்ணர் பாதம் போட்டது; உருகி உருகி கண்ணன் பாடல்களைப் பாடியது; சீடை, எள்ளு அடை என்று அனைவருக்கும் பரிமாறியது... எனத் தோழியின் சின்னம்மா பெண் சுழன்று கொண்டே இருந்ததைப் பார்க்க பொறாமையாக இருந்தது.

காபி குடித்து முடித்தபிறகு, விநாயகர் சதுர்த்தியின் பூவரச இலை கொழுக்கட்டை, நவராத்திரியின் கொலு, தீபாவளி ஸ்வீட் என்றெல்லாம் பேசிப் பேசி பொங்கல் வரை வந்தாகிவிட்டது!

மீண்டும் பயணம் தொடர்ந்தபோது, ''இப்படித்தான், கோல மாவுல என் காலை நனைச்சு, எங்கம்மா கிருஷ்ணர் பாதம் போட்டாங்க. ஆனா, எட்டாவது படிக்கற எம்பொண்ணுக்கு, கிருஷ்ணர் பாதம்னா என்னன்னே தெரியாது' என்று வருத்தமாகச் சொன்னார் ஒரு தோழி.

ப்ளஸ் ஒன் படிக்கும் பெண்ணை, இப்போதே 'ஐ.ஏ.எஸ்' தேர்வுக்கு தயார்படுத்திக் கொண்டிருக்கும் மற்றொரு தோழி, ''அந்த பூவரசு இலை கொழுக்கட்டை இருக்கே, சின்ன வயசுல சாப்பிட்டது. அதையெல்லாம் எம்பொண்ணு கேள்விப்பட்டதுகூட இல்ல' என்றார் உதட்டைப் பிதுக்கியபடி.

''எப்பப் பார்த்தாலும் 'படி படி'னு ஸ்கூல் சப்ஜெக்ட்ஸையே சொல்லிக் கொடுத்தோம். ஆனா, நம்மோட அம்மா, பாட்டியெல்லாம் கொண்டாடின பண்டிகைங்க, அதுக்கான தாத்பர்யங்கள், ஸ்பெஷலா சமைக்கற திண்பண்டம் இதெல்லாத்தையும் அணு அணுவா ரசிச்சு, ருசிச்ச நாம... இதெல்லாம்கூட குழந்தைங்க தெரிஞ்சு வெச்சிருக்க வேண்டிய சப்ஜெக்ட்தான்கிறத மறந்துட்டோமே'' என்கிற ஆதங்கம் இருவரின் பேச்சிலும் பொங்கியது!

அர்த்தமுள்ள ஆதங்கம்தானே... வேர்களைத் தொலைத்துவிட்டு, வானத்தைத் தொட நினைத்தால் எப்படி?

உரிமையுடன்

நமக்குள்ளே...


ஆசிரியர்