நடப்பு
Published:Updated:

வரவேற்போம் புதிய ஆலோசகரை..!

வரவேற்போம் புதிய ஆலோசகரை..!

ஹலோ வாசகர்களே..!

வரவேற்போம் புதிய ஆலோசகரை..!

இந்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகராக உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியனை நியமித்திருக்கிறார் பிரதமர் மோடி. பிரதமரின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதே. நம் நாடு முன்னேற வேண்டும் எனில், உலகப் பொருளாதாரத்தை நன்கு புரிந்துவைத்திருக்க வேண்டும். வளர்ச்சி பற்றி புதிய கோணத்தில் சிந்தித்து, அதற்குத் தடைகளாக இருக்கும் முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறியும் வழிகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதெல்லாம் தெரிந்த ஒருவர் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டு  இருப்பதால், இனி நம் நாட்டின் வளர்ச்சி புதிய வேகமெடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆனால், இதன் இன்னொரு பக்கத்தையும் கவனிக்க வேண்டும்.  வளர்ச்சிப் பொருளாதாரத்தில் உலக அளவில் முக்கிய நிபுணராக இருந்தாலும், சந்தைக்கு ஆதரவாகவே செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் அரவிந்த் சுப்பிரமணியன். பல்வேறு துறைகளில் பல முக்கிய சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலமே இந்தியாவின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த முடியும் என தீர்க்கமாக நம்புபவர். உலக வர்த்தக மையத்தின் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியா சொன்னபோது, அது தவறு என்று வாதிட்டவர். நமது தனிப்பட்ட நலனைவிட, உலகத்துடன் ஒன்றிப் போகிற போக்கையை இனி இவர் கடைப்பிடிப்பார் என்றேபடுகிறது.

வரவேற்போம் புதிய ஆலோசகரை..!

நமது பொருளாதார வளர்ச்சிக்கு புதிய சீர்திருத்தங்கள் அவசியம் தேவைதான். என்றாலும், அவை இந்திய சூழ்நிலைக்கு  பொருந்தி வருமா என்பதை நன்கு ஆராய்ந்தபின்பே அதைக் கொண்டுவர வேண்டும். உதாரணமாக, பலவிதமான மானியங்கள், நியாய விலையில் ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவது போன்றவை முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்கிற சிந்தனையே சந்தைப் பொருளாதாரத்துக்கு ஆதரவளிக்கும் சிந்தனையாளர்களிடம் அதிகம் இருக்கிறது. மானியம் உள்பட தற்போது அரசாங்கம் அளிக்கும் சலுகைகளை படிப்படியாகக் குறைக்க வேண்டும். ஒரேயடியாக நீக்கினால் வறுமைகோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

சீர்திருத்தங்களுக்கு மாற்றங்கள் தேவைதான். ஆனால், மக்கள் நலனையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்பதே நம் கோரிக்கை!

-ஆசிரியர்