Published:Updated:

மக்களே... மாவட்ட ஆட்சித் தலைவர்களே..!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

மக்களே... மாவட்ட ஆட்சித் தலைவர்களே..!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

இன்றைக்குத் தமிழகம் முழுக்க தெரியும் நிறுவனமாக மாறியிருக்கிறது ஆருத்ரா நகைக்கடை. ‘ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால், மாதம் 30,000 ரூபாய் தருவோம்’ என்று இந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்புதான் அதற்குக் காரணம்.

கிட்டத்தட்ட 360% வட்டி என்றால் சும்மாவா? இதைக் கேட்டதுமே பல்வேறு நகரங்களிலும் பணத்தைக் கொட்டிக் குவித்திருக்கிறார்கள் மக்கள். இந்நிறுவனம் என்ன தொழில் செய்கிறது; அந்த அளவுக்கு லாபம் கிடைக்குமா; அரசிடமிருந்து முறையான அனுமதிகளைப் பெற்றுள்ளார்களா; நிறுவனத்தின் செயல்பாடு சரியில்லை எனில், யாரிடம் புகார் செய்வது? இப்படி எந்தவிதமான கேள்வி களையும் எழுப்பாமல், லாபத்தை மட்டும் பார்த்து மக்கள் லட்சக்கணக்கில் அள்ளிக் கொட்டியிருப்பது அதிர்ச்சியையே ஏற்படுத்துகிறது.

பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நம் மாநிலத்தில் கல்வியறிவு அதிகம். கொஞ்சம் முயற்சி செய்தால், எந்தவொரு நிறுவனத்தைப் பற்றியும் எளிதாக விசாரித்து அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு நிறையவே இருக்கிறது. இது போன்ற ‘சதுரங்க வேட்டை’ நிறுவனங்கள் பற்றித் தொடர்ந்து ஊடகங்கள் விழிப்பு உணர்வு ஊட்டியபடியே இருக்கின்றன. என்றாலும், மக்கள் திரும்பத் திரும்ப பணத்தை இழக்கக் காரணம், பேராசையும் அறியாமையும்தான். ‘எது சாத்தியம், எது சாத்தியம் இல்லை’ என்பதை முழுமையாக உணர்ந்து செயல்பட ஆரம்பிக்கும்வரை, புதிது புதிதாக இப்படி ‘கடை’ திறந்துகொண்டேதான் இருப்பார்கள்!

மோசடி வலை விரித்த ஆருத்ரா நகைக்கடை, குறுகிய காலத்திலேயே சிக்கிக்கொண்டுவிட்டது. இந்த விஷயத்தில் விரைவாகவே நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது. இதற்குக் காரணமே, மோசடிப் புகார்கள் நேரடியாகத் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வைக்குச் சென்றதும், உடனடியாக அவர் நடவடிக்கைக்கு உத்தரவிட்டதும்தான்.

காவல்துறையில் பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டதே, இது போன்ற ‘சதுரங்க வேட்டை’களைத் தடுக்கவும்தான். ஆனால், புகார் வந்தால்கூட கண்டுகொள்ளாமல் கையைக் கட்டிக்கொண்டு விடுவதுதான் பெரும்பாலும் வழக்கமாக இருக்கிறது. அத்துடன், ‘சதுரங்க வேட்டை’க்காரர்களுடன் ‘பங்காளி’களாகவும் காக்கிச்சட்டைகள் மாறிவிடுகின்றன. அதனால்தான், மோசடி நிறுவனங்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் தொடர்ந்து செயல்படு கின்றன.

மக்களே... தமிழகம் முழுக்க இன்றும் பல நிறுவனங்கள், பல்வேறு மோசடித் திட்டங்களை செயல்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை உடனடியாக முடக்க வேண்டுமெனில், உங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார்களைக் கொண்டு செல்லுங்கள். மாவட்ட ஆட்சித் தலைவர்களே... திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் போல, உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, மக்கள் பணத்தைக் காப்பாற்றுங்கள்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism