Published:Updated:

பணத்தைத் திரும்பத் தர நடவடிக்கை எடுங்கள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

பணத்தைத் திரும்பத் தர நடவடிக்கை எடுங்கள்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

முதலீட்டு உலகில் அப்பாவி மக்களுக்காக அடிக்கடி குரல் கொடுப்பவர் பிரபல பத்திரிகையாளர் சுசிதா தலால். ஹர்ஷத் மேத்தா செய்த மோசடியையும், தேசிய பங்குச் சந்தையில் (NSE) நடந்த மோசடியையும் வெட்ட வெளிச்சமாக்கியவர். இவர், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

‘‘வங்கிகள், பங்குச் சந்தை, இன்ஷூரன்ஸ் எனப் பலவற்றிலும் மக்கள் முதலீடு செய்த பணம் சுமார் ரூ.82,000 கோடி யாரும் கோராமல் (Unclaimed) கிடக்கிறது. இந்தப் பணத்தைக் கட்டியவர்களின் வாரிசுகள் இது பற்றித் தெரிந்துகொண்டு பணத்தைக் கோர உதவுகிற மாதிரி, பணம் கட்டியவர்கள் குறித்த தகவல்களை இணையதளத்தில் வெளியிட ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது’’ என சுசிதா தலால் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஆர்.பி.ஐ, செபி உட்பட முக்கியமான அரசு அமைப்புகளுக்கு அனுப்பி, விளக்கம் அளிக்கும்படி கேட்டிருக்கிறது.

பி.எஃப் நிறுவனத்தில் ரூ.26,497 கோடி, வங்கிக் கணக்குகளில் ரூ.18,381 கோடி, செயலற்றுப்போன மியூச்சுவல் ஃபண்ட் கணக்கில் ரூ.17,880 கோடி, எல்.ஐ.சி-யில் ரூ.15,167 கோடி, வங்கி பிக்ஸட் டெபாசிட்டில் ரூ.4,820 கோடி, பங்கு டிவிடெண்ட் தொகையைக் கோராத வகையில் ரூ.4,100 கோடியும் கிடக்கிறது.

இந்தப் பணத்தை உரியவர்களிடம் சேர்க்க வேண்டும் என அரசு அமைப்புகள் சிறுசிறு முயற்சிகளைச் செய்கின்றன. ஆனால், அவற்றால் மக்களுக்குப் பெரிய பலனில்லை. கேட்பாரற்றுக் கிடக்கும் தொகையானது ஆண்டுதோறும் பெருகிக் கொண்டிருப்பது, இந்த உண்மையை நமக்கு உரக்கச் சொல்கிறது. இந்தப் பணம், எத்தனை ஏழை, எளிய அப்பாவிகளின் பணமோ..! போதுமான படிப்பறிவில்லாத காரணத்தாலும், தெளிவில்லாத காரணத்தாலும், இப்படியொரு தொகை தன்னுடய ரத்தசொந்தங்களால் முதலீடு செய்யப்பட்டிருக்கும் விஷயமே தெரியாத காரணத்தாலும் பலரும் ஏமாந்துகொண்டிருக்கிறார்கள். அப்பாவி மக்களின் இந்தப் பணத்தை அரசு தன்வசம் வைத்திருப்பது அறமற்ற செயல். இந்தப் பணத்துக்கு உரியவர்கள் தவிர, வேறு யாரும் பெற்றுவிடக் கூடாது என்பது அரசின் நியாயமான எண்ணமாக இருக்கலாம். அதற்காக உரியவர்களே இந்தப் பணத்தைப் பெற முடியாத அளவுக்குத் திண்டாட வேண்டுமா?

கடன் வாங்கியவர்கள் எங்கே போனாலும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் விரட்டிச் சென்று அசலையும் வட்டியையும் வசூலிக்கும் வங்கிகள், டெபாசிட்தாரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குரிய பணத்தை ஒப்படைக்க ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை? இதற்காக வங்கி ஊழியர்கள் எங்கும் அலைய வேண்டாம். உரிய விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டாலே போதுமே... உரியவர்கள் சரியான சான்று தந்து, பணத்தைப் பெற்றுச் செல்வார்களே..!

அரசு அமைப்புகளில் குவிந்துகிடக்கும் இந்தப் பணத்தில் பெரும்பகுதி நடுத்தர மக்களுக்குச் சேர வேண்டிய பணம். இதை உரிய மக்களுக்குத் திரும்பத் தரும் நடவடிக்கையை எடுக்காமல், அரசும், அரசு அமைப்புகளும் தங்கள் பையில் போட்டுக்கொண்டு கவலை இல்லாமல் இருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. இந்தப் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க இனியாவது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!

- ஆசிரியர்